சிவகிரி அருகே பயங்கரம்: 2 வயது குழந்தை கொடூரக்கொலை உறவுக்கார பெண் கைது


சிவகிரி அருகே பயங்கரம்: 2 வயது குழந்தை கொடூரக்கொலை உறவுக்கார பெண் கைது
x
தினத்தந்தி 13 Sep 2019 10:30 PM GMT (Updated: 13 Sep 2019 8:17 PM GMT)

சிவகிரி அருகே 2 வயது குழந்தையை கொடூரமாக கொலை செய்த உறவுக்கார பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

சிவகிரி, 

சிவகிரி அருகே 2 வயது குழந்தையை கொடூரமாக கொலை செய்த உறவுக்கார பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

2 வயது குழந்தை

நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தென்மலை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பரமசிவம். அவருடைய மகள் கவினா (வயது 2). பரமசிவத்தின் உறவினரான பக்கத்து வீட்டை சேர்ந்தவர் பழனிசாமி. இவருக்கு திருமணம் முடிந்து முனீஸ்வரி (23) என்ற மனைவியும், 3 மாதத்தில் அன்புச்செல்வன் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். பழனிசாமி அடிக்கடி கவினாவை தனது வீட்டுக்கு தூக்கி வந்து கொஞ்சி மகிழ்வாராம்.

இந்த நிலையில் சம்பவத்தன்று பழனிசாமி, கவினாவை தனது வீட்டுக்கு தூக்கிச் சென்றார். பின்னர் சிறிது நேரத்தில் பழனிசாமி, குழந்தை கவினாவை தூக்கிக் கொண்டு பதற்றத்துடன் பரமசிவம் வீட்டுக்கு சென்றார். அவர்கள் என்னவென்று விசாரித்தபோது, குழந்தை பேச்சு மூச்சு இல்லாமல் கிடக்கிறது என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், குழந்தையை தூக்கிக் கொண்டு கரிவலம்வந்தநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றனர்.

சாவில் மர்மம்

பின்னர் அங்கிருந்து சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை கவினாவுக்கு உடலில் அசைவுகள் ஏதும் இல்லை. எனவே, பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுங்கள் என கூறினர். இதையடுத்து பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை கவினா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்து கவினாவின் பெற்றோர் கதறி அழுதனர். மேலும் குழந்தையின் உடலில் காயம் எதுவும் இல்லை. எனவே, சாவில் மர்மம் இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து சிவகிரி போலீசில் புகார் செய்யப்பட்டது. சந்தேகத்தின் பேரில் பழனிசாமி, முனீஸ்வரி ஆகியோரிடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரைசிங்கம் தீவிர விசாரணை நடத்தினார். விசாரணையில், குழந்தை கவினாவை முனீஸ்வரி தலையணையால் அமுக்கி கொடூரமாக கொன்றதை ஒப்புக்கொண்டார்.

பின்னர் நடத்திய மேல்விசாரணையில் போலீசாரிடம், முனீஸ்வரி கூறியதாவது:-

தலையணையால் அமுக்கி கொலை

நானும், பழனிசாமியும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள நூற்பாலையில் வேலை பார்த்தோம். அப்போது எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்தோம். கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு அன்புச்செல்வன் என்ற ஆண் குழந்தை உள்ளது. எனது கணவர் பழனிசாமி தனது குழந்தையை தூக்கிக் கொஞ்சாமல் அடிக்கடி கவினாவை தூக்கி வந்து கொஞ்சுவார். இது எனக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. இதனால் நான் பித்து பிடித்தது போல் ஆகிவிட்டேன்.

கடந்த 9-ந் தேதி வழக்கம் போல் எனது கணவர், கவினாவை வீட்டுக்கு தூக்கி வந்தார். பின்னர் நாங்கள் புதிதாக கட்டி வரும் வீட்டுக்கு அவர் சென்றுவிட்டார். அந்த நேரத்தில் கவினாவை கட்டிலில் படுக்கவைத்து தலையணையால் அமுக்கிக் கொன்றேன். பின்னர் எனது கணவருக்கு போன் செய்து, கவினா பேச்சு மூச்சு இல்லாமல் கிடக்கிறாள் என கூறினேன். அவரும் வந்து குழந்தையை பார்த்தார். நானும் எதுவும் தெரியாதது போல் நடந்து கொண்டேன். ஆனால், நான் செய்த கொடுமையான செயல் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

கைது

இதையடுத்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து முனீஸ்வரியை கைது செய்தனர். பின்னர் அவரை சிவகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை மாஜிஸ்திரேட்டு விசாரித்து, முனீஸ்வரியை மதுரை பெண்கள் ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் முனீஸ்வரியை, ஜெயிலில் அடைத்தனர்.

Next Story