9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் - 6 இடங்களில் நடந்தது


9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் - 6 இடங்களில் நடந்தது
x
தினத்தந்தி 14 Sept 2019 4:00 AM IST (Updated: 14 Sept 2019 1:51 AM IST)
t-max-icont-min-icon

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் மாவட்டத்தில் 6 இடங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்,

தேசிய புதிய கல்வி கொள்கையை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும், தொடக்க கல்வியை அழிக்க நினைக்கிற அரசாணை 145-ஐ திரும்ப பெற வேண்டும், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கைகள், பணி மாறுதல் ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று அந்தந்த கல்வி மாவட்டங்களில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (ஜாக்டோ- ஜியோ) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி நிதி காப்பாளர் சண்முகசாமி தலைமை தாங்கினார். தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில நிர்வாகிகள் நடராஜன், செல்லையா ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினர். இதில் ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கதிர்வேல், அறிவழகன், நாராயணன், கோபிநாத், மகிமைதாஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் திண்டிவனத்தில் ஜாக்டோ- ஜியோ வட்டார அமைப்பாளர் சீனி.சின்னசாமி தலைமையிலும், செஞ்சியில் ஒருங்கிணைப்பாளர் லூர்துசேவியர் தலைமையிலும், திருக்கோவிலூரில் வட்ட தலைவர் ரமேஷ் தலைமையிலும், கள்ளக்குறிச்சியில் ஒருங்கிணைப்பாளர் வீரபத்திரன் தலைமையிலும், உளுந்தூர்பேட்டையில் ஒருங்கிணைப்பாளர் ராமதாஸ் தலைமையிலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story