விக்கிரவாண்டி பகுதியில் பலத்த மழை மின்சாரம் தாக்கி பெண் பலி
விக்கிரவாண்டி பகுதியில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது. அப்போது மின்சாரம் தாக்கியதில் பெண் பலியானார்.
விக்கிரவாண்டி,
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று இரவு 7 மணி அளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக கொட்டியது. இந்த மழையின் போது கூரை வீடு ஒழுகியதால், தார்ப்பாய் போட்ட பெண் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் நடந்தது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
விக்கிரவாண்டி அருகே உள்ள திருநந்திபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 55), தொழிலாளி. இவரது மனைவி மகேஸ்வரி(45). இவர்களுக்கு பூங்குழலி, மலர்விழி, கனி என்ற 3 மகள்கள் உள்ளனர். நேற்று இரவு விக்கிரவாண்டி பகுதியில் பலத்த மழை பெய்தது. அப்போது கணேசனின் கூரை வீட்டுக்குள் ஒழுக ஆரம்பித்தது. இதை பார்த்த கணேசனும், மகேஸ்வரியும் மழைநீர் ஒழுகிய இடத்தில் தார்ப்பாய் போட்டனர்.
அப்போது கூரை வீட்டின் மேலே சென்ற மின்வயர் மீது மகேஸ்வரியின் கை உரசியதாக தெரிகிறது. இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டதில் அவர் படுகாயமடைந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கணேசன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மகேஸ்வரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பெரியதச்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story