சிதம்பரம் அருகே, கொள்ளிடம் வெள்ளத்தில் தரைப்பாலம் மூழ்கியது - கிராம மக்கள் ரப்பர் படகில் அழைத்து வரப்பட்டனர்


சிதம்பரம் அருகே, கொள்ளிடம் வெள்ளத்தில் தரைப்பாலம் மூழ்கியது - கிராம மக்கள் ரப்பர் படகில் அழைத்து வரப்பட்டனர்
x
தினத்தந்தி 14 Sept 2019 4:00 AM IST (Updated: 14 Sept 2019 2:24 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் தரைப்பாலம் மூழ்கியது. இதனால் கிராம மக்கள் ரப்பர் படகில் அழைத்து வரப்பட்டனர்.

சிதம்பரம்,

கர்நாடக மாநில அணைகளில் இருந்து அதிகப்படியான நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. இதனால் மேட்டூர் அணை நிரம்பியது. இந்த நீர் முக்கொம்பு வழியாக கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் தற்போது தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதில் கடலூர், தஞ்சை மாவட்ட எல்லையில் கொள்ளிடத்தின் குறுக்கே அமைந்திருக்கும் கீழணையில் இருந்து அதிகப்படியான நீர் கொள்ளிடம் ஆற்றின் வழியாக கடலில் சென்று கலந்து வருகிறது. இந்த நிலையில் கீழணைக்கு நீர் வரத்தானது கடந்த சில தினங்களாக படிப்படியாக அதிகரித்து வந்தது.

இதில் நேற்று இரவு நீர்வரத்து வினாடிக்கு 41 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இதில் வடவாறு உள்ளிட்ட வாய்க்கால்கள் வழியாக 4 ஆயிரம் கனஅடி நீர் பாசனத்திற்காக திறக்கப்பட்டது. மீதமுள்ள 37 ஆயிரம் கனஅடி நீர் அப்படியே கொள்ளிடத்தில் வெளியேற்றப்பட்டது.

இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் சிதம்பரம் அருகே பெராம்பட்டில் இருந்து திட்டுகாட்டூர், நடுத்திட்டு, மேலகுண்டலபாடி, கீழகுண்டலபாடி உள்ளிட்ட கிராமங்களை இணைக்கும் வகையில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் திட்டுக்காட்டூர் உள்ளிட்ட 4 கிராமங்களை சேர்ந்த மக்கள் பெராம்பட்டு பகுதிக்கு வர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் தலைமையில் உதவி மாவட்ட அலுவலர் செந்தில், சிதம்பரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ரங்கபாஷியம் மற்றும் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் நேரில் சென்று திட்டுக்காட்டூர், நடுத்திட்டு, மேலகுண்டலபாடி, கீழகுண்டலபாடி ஆகிய கிராமங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் தினசரி கூலி வேலை உள்ளிட்ட இதர பணிகளுக்கு செல்லும் பொதுமக்களை ரப்பர் படகு மூலம் பாதுகாப்பாக அழைத்து சென்று வந்தனர்.

இந்த சூழ்நிலையில் மதியத்திற்கு பிறகு நீர்வரத்து குறைய தொடங்கியது. அதாவது கீழணைக்கு வினாடிக்கு 41 ஆயிரம் கன அடியாக இருந்த நீர் வரத்து 35 ஆயிரம் கன அடியாக குறைந்தது. இதையடுத்து பாசனத்திற்கு வினாடிக்கு 4 ஆயிரம் கன அடியும், கொள்ளிடம் ஆற்றில் 31 ஆயிரம் கன அடியும் வெளியேற்றப்பட்டது. இதனால் கொள்ளிடத்தில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம், படிப்படியாக குறைய தொடங்கியது.

பெராம்பட்டு-திட்டுக்காட்டூர் தரைப்பாலத்திலும் வெள்ளத்தின் அளவு குறைந்ததால், மாலையில் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கிராம மக்களே பாலத்தின் வழியாக பாதுகாப்பாக சென்று வர தொடங்கினர். இனி வரும் நாட்களில் நீர் வரத்தானது படிப்படியாக குறையும் என்றும், இருப்பினும் நீர் வரத்தை தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story