மாவட்ட செய்திகள்

திருப்பூர் மாவட்டத்தில் 2,483 வாக்குச்சாவடிகள் - கலெக்டர் தகவல் + "||" + 2,483 polling booths in Tirupur district collector information

திருப்பூர் மாவட்டத்தில் 2,483 வாக்குச்சாவடிகள் - கலெக்டர் தகவல்

திருப்பூர் மாவட்டத்தில் 2,483 வாக்குச்சாவடிகள் - கலெக்டர் தகவல்
திருப்பூர் மாவட்டத்தில் 2,483 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருப்பூர், 

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு உரிய வரைவு வாக்குச்சாவடி பட்டியல்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி, திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று வெளியிட்டார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் செய்யவும், 1,500 வாக்காளர்களுக்கும் அதிகமாக உள்ள வாக்குச்சாவடிகளை பிரிக்கும் பணிகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் கால நிர்ணயம் செய்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவினாசி, பல்லடம், காங்கேயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடிகள் வாக்காளர்கள் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஆகியோரால் தணிக்கை செய்யப்பட்டு, வாக்குச்சாவடிகளை பிரிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் பிரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளை உள்ளடக்கிய வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் நகல்கள் வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், சப்-கலெக்டர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம், ஆர்.டி.ஓ.அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலகம், நகராட்சி அலுவலகம் ஆகியவற்றில் பொதுமக்கள் பார்வைக்காக வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி 8 சட்டமன்ற தொகுதிகளில் 2 ஆயிரத்து 482 வாக்குச்சாவடிகள் இருந்தன. இதில் பல்லடம் சட்டமன்ற தொகுதியில் பி.வடுகபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1,514 வாக்காளர்கள் இருந்தனர். இதனால் வாக்காளர்களை இரண்டாக பிரித்து அதே பள்ளியில் கூடுதலாக ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது 2 ஆயிரத்து 483 வாக்குச்சாவடிகள் உள்ளன.

மேலும் தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் எலுகாம் வலசு அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள ஒரு வாக்குச்சாவடி அதே பள்ளியில் வேறு கட்டிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. அதுபோல் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் சாமராயப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உள்ள ஒரு வாக்குச்சாவடி கட்டிடம் பழுது காரணமாக அந்த வாக்குச்சாவடி சாமராயப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளது.

வரைவு வாக்குச்சாவடி பட்டியல் தொடர்பான கோரிக்கைகள், ஆட்சேபனைகள் இருந்தால் வருகிற 19-ந் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக கலெக்டருக்கு தெரிவிக்கலாம்.

மேலும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு தாராபுரம் சப்-கலெக்டர், தாராபுரம் தாசில்தார் ஆகியோரிடமும், காங்கேயம் தொகுதிக்கு தாராபுரம் சப்-கலெக்டர், காங்கேயம் தாசில்தார் ஆகியோரிடமும், அவினாசி தொகுதியில் திருப்பூர் ஆர்.டி.ஓ., அவினாசி தாசில்தார் ஆகியோரிடமும், திருப்பூர் வடக்கு தொகுதியில் திருப்பூர் ஆர்.டி.ஓ., திருப்பூர் வடக்கு தாசில்தார் ஆகியோரிடமும், திருப்பூர் தெற்கு தொகுதியில் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர், மாநகராட்சி உதவி ஆணையாளர்கள் ஆகியோரிடமும், பல்லடம் தொகுதியில் திருப்பூர் ஆர்.டி.ஓ., பல்லடம் தாசில்தார் ஆகியோரிடமும், உடுமலை தொகுதியில் உடுமலை ஆர்.டி.ஓ., உடுமலை தாசில்தார் ஆகியோரிடமும், மடத்துக்குளம் தொகுதியில் உடுமலை ஆர்.டி.ஓ., மடத்துக்குளம் தாசில்தார் ஆகியோரிடமும் எழுத்துப்பூர்வமாக கோரிக்கைகள், ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம்.

வருகிற 20, 21-ந் தேதிகளில் அந்தந்த சட்டமன்ற தொகுதி அளவில் வாக்காளர் பதிவு அலுவலர்களால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு கூட்டம் நடத்தி கருத்துகள் கேட்கப்படும். அதன்பிறகு மாவட்ட அளவில் மீண்டும் கூட்டம் நடத்தப்பட்டு முடிவு செய்யப்படும்.

வருகிற 30-ந் தேதி வரை நடைமுறைப்படுத்தப்படும் வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சாகுல் அமீது, திருப்பூர் ஆர்.டி.ஓ. செண்பகவல்லி, தேர்தல் தாசில்தார் முருகதாஸ், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.