மாவட்ட செய்திகள்

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் ஆடம்பர திருமணம் - மரபை மீறி நடந்ததால் பக்தர்கள் அதிருப்தி + "||" + Chidambaram Natarajar Temple In the Millennium Hall Luxury wedding

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் ஆடம்பர திருமணம் - மரபை மீறி நடந்ததால் பக்தர்கள் அதிருப்தி

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் ஆடம்பர திருமணம் - மரபை மீறி நடந்ததால் பக்தர்கள் அதிருப்தி
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் மரபை மீறி நடந்த ஆடம்பர திருமணம் பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
சிதம்பரம், 

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ளது உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில். இந்த கோவிலில் அமைந்துள்ள ராஜசபை தனி சிறப்பு வாய்ந்ததாகும். ஏனெனில் ஆண்டுதோறும் நடக்கும் ஆனி திருமஞ்சனம் மற்றும் மார்கழி ஆருத்ரா தரிசனத்தின் போது மட்டும் மூலவர் நடராஜர் சிவகாமசுந்தரி அம்பாளுடன் ராஜசபை எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் தான் எழுந்தருள்வார்.

அங்கு மகா அபிஷேகம், சொர்ண அபிஷேகம், லட்சார்ச்சனை போன்றவை நடைபெற்று திருஆபரண அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். எனவே நடராஜரின் ராஜசபை புனிதமான இடம் என்பதால் ஆன்மிக நிகழ்ச்சிகள் தவிர மற்ற நிகழ்ச்சிகள் எதுவும் ஆயிரங்கால் மண்டபத்தில் எந்த காலத்திலும் நடத்தப்பட்டது இல்லை. அத்தகைய மரபு தற்போது மாற்றப்பட்டு இருப்பது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

நடராஜர் கோவிலை பொறுத்தவரை பல மரபுகள் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. அதில், திருமணம் வடக்கு கோபுரம் அருகில் உள்ள பாண்டியநாதர் கோவில் சன்னதியில் தான் நடைபெறும். ஆயிரங்கால் மண்டபத்தில் இதுநாள் வரைக்கும் எந்த திருமண வைபவங்களும் நடைபெற்றது இல்லை.

இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி சிவகாசியை சேர்ந்த பிரபல பட்டாசு அதிபரின் மகளுக்கும், சென்னை பிரபல பாத்திர கடை அதிபரின் மகனுக்கும் திருமணம் நடராஜர் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. இது தான் தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்து இருக்கிறது.

திருமணத்தையொட்டி ஆயிரங்கால் மண்டபமே நட்சத்திர ஓட்டல் போன்று மின்னொளி மற்றும் வண்ண மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அதாவது கோவில் விழா நேரத்தில் கூட அதுபோன்ற அளவுக்கு அலங்காரம் நடைபெற்று இருக்காது. அந்த அளவுக்கு ஆயிரங்கால் மண்டபம் ஜொலித்தது.

இங்கு குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்துள்ளது. ஆயிரங்கால் மண்டபத்தில் மணமேடை அமைத்து மணமகன், மணமகள் கழுத்தில் தாலிகட்டி திருமணம் நடந்தது. தொடர்ந்து திருமண சடங்குகளும் அங்கு வைத்தே நடந்துள்ளது. மேலும் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் அங்கேயே விருந்தும் பரிமாறப்பட்டுள்ளது.

ஆனி திருமஞ்சனம், மார்கழி ஆருத்ரா தரிசனம் நடைபெறும் காலத்தில் நடராஜர் ஆனந்த நடனம் புரியும் ஆயிரங்கால் மண்டபத்தின் புனிதமே பாதிக்கப்பட்டு விட்டதாக பக்தர்கள் குமுறுகிறார்கள். இந்த நிலையில் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட படங்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருவது பெரும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.

அதிகம் வாசிக்கப்பட்டவை