மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது


மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது
x
தினத்தந்தி 15 Sept 2019 4:00 AM IST (Updated: 14 Sept 2019 6:47 PM IST)
t-max-icont-min-icon

பள்ளிக்கூட மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

பவானி,

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள குருப்பநாயக்கன்பாளையம் விதைப்பண்ணை அருகே வசித்து வருபவர் சக்திவேல் (வயது 47). திருமணம் ஆகாதவர். இவர் பவானி பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தாவரவியல் பாட ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

இவர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது.

இதுகுறித்து மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் கூறினார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஆசிரியர் சக்திவேலை பணி நீக்கம் செய்யுமாறு வலியுறுத்தினர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் மாவட்ட கல்வி அதிகாரி அங்கு வந்து பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதையடுத்து அவர் ஆசிரியர் சக்திவேலை பணியிட மாறுதல் செய்து உத்தரவிட்டார். இதுபற்றி அறிந்ததும் ஆசிரியர் தலைமறைவானார். உடனே இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர்கள் பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் சக்திவேல் மீது இன்ஸ்பெக்டர் வினோதினி வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தார்.

இந்தநிலையில் சக்திவேல் பவானி லட்சுமிநகர் பஸ் நிறுத்தத்தில் சங்ககிரி செல்ல நிற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று அவரை சுற்றி வளைத்து பிடித்து நேற்று கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது.

கைது செய்யப்பட்ட சக்திவேல் ஈரோடு மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் காவலில் கோபியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story