பேனர் வைக்கக்கூடாது என்ற உத்தரவுக்கு அ.தி.மு.க.வினர் கட்டுப்படுவார்கள் - அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி


பேனர் வைக்கக்கூடாது என்ற உத்தரவுக்கு அ.தி.மு.க.வினர் கட்டுப்படுவார்கள் - அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
x
தினத்தந்தி 14 Sep 2019 11:00 PM GMT (Updated: 14 Sep 2019 5:34 PM GMT)

அ.தி.மு.க. ராணுவ கட்டுப்பாடு கொண்ட இயக்கம் என்றும், பேனர்கள் வைக்கக்கூடாது என்ற உத்தரவுக்கு தொண்டர்கள் கட்டுப்படுவார்கள் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

மதுரை,

மதுரை மாநகராட்சி மீனாம்பிகை நகர் பகுதியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி தொடக்க விழா நேற்று நடந்தது. மாநகராட்சி கமிஷனர் விசாகன் முன்னிலை வகித்தார். அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்கி பணியை தொடங்கி வைத்தார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு வர ரூ.1,020 கோடி செலவில் திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தி நடைமுறைக்கு கொண்டு வந்தால் மதுரை மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் கிடைக்கும். கோர்ட்டு உத்தரவுகளை ஜெயலலிதாவின் அரசு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. அதன்படி இனிவரும் காலங்களில் பேனர்கள் வைப்பதற்கு உரிய விதிமுறைகள் பின்பற்றப்படும். அரசின் திட்ட தொடக்க விழாவில் அந்த திட்டம் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக ஒரு விளம்பர பேனர் மட்டும் உரிய அனுமதியோடு வைக்கலாம்.

அ.தி.மு.க. தொண்டர்கள் கட்டுப்பாடு மிக்கவர்கள். அ.தி.மு.க. ராணுவ கட்டுப்பாடு உடைய இயக்கம். இந்த நிகழ்ச்சிக்கு கூட, பேனர்கள் வைக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் நீதிமன்றம் மற்றும் கட்சி தலைமையின் உத்தரவுக்கு ஏற்ப பேனர்கள் வைக்கவில்லை. ஏற்கனவே வைக்கப்பட்டு இருந்த பேனர் களும் அகற்றப்பட்டுவிட்டது. பேனர்கள் வைக்கக்கூடாது என்ற உத்தரவுக்கு தொண்டர்கள் கட்டுப்படுவார்கள். தமிழக கல்வித்துறை, மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. தற்போது 5 மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தும் முடிவு வரவேற்கத்தக்கது. எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதுவதற்கு இந்த தேர்வு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story