முல்பாகலில், கடன் தொல்லையால் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை மந்திரி நாகேஷ் நேரில் ஆறுதல்
முல்பாகலில் கடன் தொல்லையால் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். மந்திரி நாகேஷ், நேரில் சென்று விவசாயி குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார்.
கோலார் தங்கவயல்,
முல்பாகலில் கடன் தொல்லையால் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். மந்திரி நாகேஷ், நேரில் சென்று விவசாயி குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார்.
விவசாயி தற்கொலை
கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா மணிகட்டா கிராமத்தை சேர்ந்தவர் கோபால் (வயது 44). விவசாயி. இவர் தனக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்வதற்காக ரூ.6 லட்சம் வரை வங்கியில் கடன் வாங்கினார். ஆனால் போதிய மழை இல்லாததால் அவருக்கு விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் கடனை திரும்ப செலுத்த முடியாமல் கோபால், அவதிப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் வங்கியில் இருந்து கடனை திரும்ப செலுத்தகோரி நோட்டீசு வந்தது. இதனால் மனமுடைந்த கோபால், அந்தப்பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த நிலையில், கோபாலின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், மந்திரி நாகேஷ் சம்பவ இடத்துக்கு வந்தால் தான் உடலை எடுப்பதாக கூறினார்கள்.
மந்திரி நேரில் அஞ்சலி
இதுபற்றி அறிந்ததும், கலால் துறை மந்திரியும், மாவட்ட பொறுப்பு மந்திரியுமான நாகேஷ், கோபாலின் வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர் தற்கொலை செய்துகொண்ட கோபாலின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர், தற்கொலை செய்துகொண்ட விவசாயி கோபாலின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து மந்திரி நாகேஷ் கூறுகையில், கடன் தொல்லையால் விவசாயிகள் யாரும் தற்கொலை என்ற விபரீத முடிவை எடுக்கக்கூடாது. தங்கள் குறைகளை மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்க வேண்டும். விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டால் அவர்களுடைய குடும்பம் பாதிக்கப்படும். மாநில அரசு எப்போதும் விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும் என்றார்.
Related Tags :
Next Story