சட்டசபை எதிர்க்கட்சி தலைவரை நியமிக்கும் விவகாரம்: சோனியாவை சந்திக்க முடியாமல் பெங்களூரு திரும்பிய சித்தராமையா


சட்டசபை எதிர்க்கட்சி தலைவரை நியமிக்கும் விவகாரம்: சோனியாவை சந்திக்க முடியாமல் பெங்களூரு திரும்பிய சித்தராமையா
x
தினத்தந்தி 15 Sept 2019 3:30 AM IST (Updated: 15 Sept 2019 12:13 AM IST)
t-max-icont-min-icon

சட்டசபை எதிர்க்கட்சி தலைவரை நியமிக்கும் விவகாரத்தில் சோனியா காந்தியை சந்திக்க முடியாமல் டெல்லியில் இருந்து சித்தராமையா பெங்களூருவுக்கு திரும்பினார்.

பெங்களூரு, 

சட்டசபை எதிர்க்கட்சி தலைவரை நியமிக்கும் விவகாரத்தில் சோனியா காந்தியை சந்திக்க முடியாமல் டெல்லியில் இருந்து சித்தராமையா பெங்களூருவுக்கு திரும்பினார்.

சோனியாவை சந்திக்க முடியாமல்...

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி அரசு கவிழ்ந்ததை தொடர்ந்து பா.ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது. இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் பதவியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சித்தராமையா, பரமேஸ்வர், டி.கே.சிவக்குமார், எச்.கே.பட்டீல் உள்ளிட்டோர் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அதுபோல, கர்நாடக மேல்-சபை தலைவர் பதவிக்கும் எஸ்.ஆர்.பட்டீல், ஆர்.வி.திம்மாப்பூர் இடையே போட்டி ஏற்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் பதவியை கைப்பற்றுவதற்காக காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை சந்தித்து பேசுவதற்காக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கடந்த 3 நாட்களுக்கு முன்பு டெல்லி சென்றிருந்தார். நேற்று முன்தினம் சோனியா காந்தியை அவர் சந்தித்து பேசுவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் சித்தராமையாவை சோனியா காந்தி சந்திக்கவில்லை. இதனால் நேற்று முன்தினம் இரவில் டெல்லியில் இருந்து அவர் பெங்களூருவுக்கு திரும்பினார்.

அடுத்த வாரம் நியமிக்க முடிவு

சோனியா காந்தியை சந்தித்து பேசி எதிர்க்கட்சி தலைவர் பதவியை தனக்கு வழங்கும்படி கேட்க சித்தராமையா முடிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பதவிக்கு ஏராளமானவர்கள் இடையே போட்டி ஏற்பட்டு உள்ளதால், மற்ற தலைவர்களுடன் கலந்து பேசி எதிர்க்கட்சி தலைவரை அடுத்த வாரம் நியமிக்க சோனியா காந்தி முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. அதே நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் போட்டியில் உள்ள டி.கே.சிவக்குமார் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு இருப்பதால், தற்சமயம் எதிர்க்கட்சி தலைவர் நியமனத்தை காங்கிரஸ் மேலிடம் தள்ளி வைத்திருப்பதாக தெரிகிறது.

இதற்கு முன்பு காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி இருந்த போது, கர்நாடக அரசியலில் சித்தராமையா சொல்வதே நடந்து வந்ததாகவும், ஆனால் சோனியா காந்தியிடம் சித்தராமையாவின் செல்வாக்கு குறைந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. என்றாலும், எதிர்க்கட்சி தலைவராக சித்தராமையாவே நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Next Story