மதுவாங்க தண்டவாளத்தை கடந்தபோது விபரீதம்; மயிரிழையில் உயிர் தப்பிய தொழிலாளி


மதுவாங்க தண்டவாளத்தை கடந்தபோது விபரீதம்; மயிரிழையில் உயிர் தப்பிய தொழிலாளி
x
தினத்தந்தி 14 Sep 2019 10:30 PM GMT (Updated: 14 Sep 2019 6:56 PM GMT)

ஈரோடு அருகே மது வாங்க மோட்டார் சைக்கிளில் ரெயில் தண்டவாளத்தை கடந்த தொழிலாளி மயிரிழையில் உயிர் தப்பினார். ரெயில் என்ஜின் டிரைவரின் சாமர்த்தியத்தால் விபத்து தவிர்க்கப்பட்டது.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் பாசூர் ரெயில் நிலையத்துக்கும், சாவடிப்பாளையம் ரெயில் நிலையத்துக்கும் இடைப்பட்ட பகுதி சின்னம்மாபுரம். இங்குள்ள ரெயில்வே தண்டவாளத்தை ஒட்டியபடி டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடை அருகே ரெயில்வே கிராசிங் கேட் ஒன்று இருந்தது. எனவே பலரும் அந்த வழியாக சென்று மதுவாங்கி வந்தனர்.

தற்போது ரெயில்வே கிராசிங் இருக்கும் பகுதியில் சுரங்க வழிப்பாதை அமைக்கும் பணி நடப்பதால், அங்கிருந்த ரெயில்வே கிராசிங் கேட் அடைக்கப்பட்டது. இதனால் பலரும் தண்டவாளத்தை கடந்து சென்று மது வாங்கி குடித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை 4.30 மணிக்கு அருகில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்க்கும் தொழிலாளி ஒருவர் மதுவாங்குவதற்காக டாஸ்மாக் கடைக்கு வந்தார். அவர் மறுபக்கம் செல்வதற்காக தண்டவாளத்தின் குறுக்கே தனது மோட்டார் சைக்கிளை தள்ளிக்கொண்டு சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் தண்டவாளங்களுக்கு நடுவே வசமாக சிக்கிக்கொண்டது.

அந்த தொழிலாளி, எவ்வளவோ முயன்றும் வண்டியை வெளியே எடுக்க முடியவில்லை. அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் திருச்சியில் இருந்து பாலக்காடு செல்லும் பயணிகள் ரெயில் ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தது. அதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சத்தம்போட்டு தொழிலாளியை எச்சரிக்கை செய்தனர். எனவே மோட்டார் சைக்கிளை தண்டவாளத்தின் இடையில் போட்டு விட்டு அவர் அங்கேயே நின்றார்.

இதற்கிடையே ரெயில் என்ஜின் டிரைவர் (லோகோ பைலட்) தண்டவாளத்தில் ஒருவர் நின்று கொண்டிருப்பதையும், நடுவில் ஏதோ கிடப்பதையும் கவனித்துவிட்டார். சமயோசிதமாக அவர் ரெயிலுக்கு உடனடி பிரேக் போட்டார். பிரேக் முறையாக போடப்பட்டதால் ரெயில் வேகம் குறைந்தது. எனினும் கட்டுக்குள் நிற்குமா? என்பது தெரியாமல் தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்தது. இதற்கிடையே சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்தவர்கள், டாஸ்மாக் கடையில் இருந்த குடிமகன்கள் ஓடிவந்து என்ன நடக்கப்போகிறதோ? என பார்க்க தொடங்கினர்.

பார்த்து கொண்டிருந்தவர்கள் மனது ‘திக்திக்’ என அடிக்க இனிமேல் மோட்டார்சைக்கிளை மீட்க முடியாது என்ற பயத்தில் அதை அப்படியே அங்கேயே விட்டுவிட்டு தன் தலை தப்பினால் போதும் என்ற எண்ணத்தில் அந்த தொழிலாளி, தண்டவாளத்தில் இருந்து சட்டென்று வெளியேறினார். அதிர்ஷ்டவசமாக மயிரிழையில் மோட்டார் சைக்கிளையொட்டி ரெயில் நின்றது. தொழிலாளியும் உயிர் தப்பினார்.

இதனால் அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். பின்னர் ரெயில் பயணிகள் ஓடிவந்து சம்பவத்தை பார்த்தனர். அங்கிருந்தவர்கள் உதவியால் மோட்டார் சைக்கிள் தண்டவாளத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது. அது லேசான சேதம் அடைந்து இருந்தது. இந்த சம்பவத்தால் 15 நிமிடங்கள் ரெயில் தாமதமாக புறப்பட்டது. தாமதத்துக்கான காரணத்தை எழுதி பொதுமக்கள் பயணிகளிடம் கையொப்பம் வாங்கிவிட்டு ரெயில் என்ஜின் டிரைவர் வண்டியை அங்கிருந்து இயக்கினார்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த ஏ.கதிர்வேல் என்பவர் கூறியதாவது:-

ரெயில் தண்டவாளத்தின் அடியில் சுரங்க நுழைவுபாதை பணிகள் முடிக்காமல் உள்ளது. ரெயில்வே கேட்டையும் மூடிவிட்டனர். இதனால் பெரும்பாலானவர்கள் தண்டவாளத்தை கடந்து தான் செல்லவேண்டியது இருக்கிறது. டாஸ்மாக் கடைக்கு வருபவர்கள் ரெயில்கள் வருவதைக்கூட கவனிக்காமல் தண்டவாளத்தை கடக்கிறார்கள். இந்த நிலை தொடர்ந்தால் விபத்துகள் அதிகம் நடைபெறும் இடமாக மாறிவிடும். எனவே முதலில் இந்த பகுதியில் இருந்து டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும். சுரங்க நுழைவு பாலத்தை உடனடியாக சரிசெய்து போக்குவரத்துக்கு ஏற்புடையதாக மாற்ற வேண்டும். ரெயில் என்ஜின் டிரைவர் சாதுர்யமாக ரெயிலை நிறுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது. ஆனால் எப்போதும் இது சாத்தியமில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story