தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் ஒரே நாளில் 1,794 வழக்குகளுக்கு தீர்வு


தூத்துக்குடி மாவட்டத்தில்  மக்கள் நீதிமன்றம் மூலம் ஒரே நாளில் 1,794 வழக்குகளுக்கு தீர்வு
x
தினத்தந்தி 15 Sept 2019 4:00 AM IST (Updated: 15 Sept 2019 12:52 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றம் மூலம் ஒரே நாளில் 1,794 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றம் மூலம் ஒரே நாளில் 1,794 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

மக்கள் நீதிமன்றம்

ஒவ்வொரு 3 மாத இடைவெளியில் ஆண்டுக்கு 4 முறை தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்)நடக்கிறது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மக்கள் நீதிமன்றம் நடந்தது. தூத்துக்குடி கோர்ட்டில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை நீதிபதி சுரேஷ் விசுவநாத் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சாமுவேல் பெஞ்சமின் முன்னிலை வகித்தார். தொடர்ந்து மூத்த நீதிபதிகள் தலைமையில் மாவட்டத்தில் 14 அமர்வுகளில் மக்கள் நீதிமன்றம் நடந்தது.

இதில் தூத்துக்குடி கோர்ட்டில் 1,562 வழக்குகளும், கோவில்பட்டி கோர்ட்டில் 1,015 வழக்குகளும், திருச்செந்தூர் கோர்ட்டில் 464 வழக்குகளும், ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் 262 வழக்குகளும், சாத்தான்குளம் கோர்ட்டில் 209 வழக்குகளும், விளாத்திகுளம் கோர்ட்டில் 193 வழக்குகளும் ஆக மொத்தம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள 3 ஆயிரத்து 705 வழக்குகள் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன.

1,794 வழக்குகளுக்கு தீர்வு

அவற்றில் 1,739 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் ரூ.5 கோடியே 55 ஆயிரத்து 76 ஆயிரத்து 600 பைசல் செய்யப்பட்டது. மேலும் ரூ.27 லட்சத்து 41 ஆயிரத்து 600 மதிப்பிலான 55 வங்கி வராக்கடன் வழக்குகளுக்கும் தீர்வு காணப்பட்டது.

இதன்மூலம் நேற்று ஒரே நாளில் மட்டும் மக்கள் நீதிமன்றம் மூலம் மொத்தம் 1,794 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு உள்ளன. முடிக்கப்பட்ட வழக்குகளுக்கான ஆணை சம்பந்தப்பட்ட வழக்காடிகளிடம் வழங்கப்பட்டது.

கோவில்பட்டி

கோவில்பட்டி சப்-கோர்ட்டில் நீதிபதி அகிலா தேவி தலைமையிலும், மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதி முரளிதரன் தலைமையிலும், மக்கள் நீதிமன்றம் நடந்தது. மோட்டார் வாகன சட்ட வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வங்கி வராக்கடன் வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அரசு வக்கீல் சந்திரசேகர் மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

Next Story