கூட்டுறவு வங்கி முன் குடும்பத்துடன் வாலிபர் தர்ணா இறந்த தந்தைக்கான பணப்பலன்களை வழங்கக்கோரிக்கை


கூட்டுறவு வங்கி முன் குடும்பத்துடன் வாலிபர் தர்ணா இறந்த தந்தைக்கான பணப்பலன்களை வழங்கக்கோரிக்கை
x
தினத்தந்தி 15 Sept 2019 4:30 AM IST (Updated: 15 Sept 2019 12:58 AM IST)
t-max-icont-min-icon

மணப்பாறை அருகே இறந்த தந்தைக்கான பணப்பலன்களை வழங்கக்கோரி கூட்டுறவு வங்கி முன் வாலிபர் ஒருவர் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மணப்பாறை,

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வெள்ளப்பூலாம்பட்டியில் ஆர்.945 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியில் சிற்றெழுத்தராக வேலுச்சாமி என்பவர் வேலை பார்த்து வந்தார். தற்போது அவர் இறந்து விட்டார். அவர் வங்கியில் பணியாற்றிய போது பணம் கையாடல் தொடர்பான வழக்கு ஒன்று நடைபெற்று வந்ததால், அவருக்கான பணப்பலன்களை வங்கி நிர்வாகம் வழங்கவில்லை. இதற்கிடையே அந்த வழக்கில் வேலுச்சாமிக்கான பணப்பலன்களை வழங்க கடந்த 2013-ம் ஆண்டு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

குடும்பத்துடன் தர்ணா

ஆனால் இதுவரை பணப்பலன்கள் வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக வேலுச்சாமியின் மகன் சத்தியசீலன் (வயது 35) சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு பலமுறை சென்று கேட்டும், அதைப்பற்றி யாரும் கண்டுகொள்ளவில்லை. இதனால் சத்தியசீலனும், அவரது குடும்பத்தினரும் மனமுடைந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை சம்பந்்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன் சத்தியசீலன் தனது குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். காலை முதல் மாலை வரை உணவின்றி குடும்பமே போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கூட வங்கி தரப்பில் யாரும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை.

பேச்சுவார்த்தை

பின்னர் இதுபற்றி தகவல் அறிந்த வங்கி களப்பணியாளர்கள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர், உங்கள் தந்தையின் பணப்பலன்கள் கிடைக்க உரிய தீர்வு காண வழிவகை செய்வதாக கூறியதையடுத்து, அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். கோர்ட்டு உத்தரவிட்டு 6 ஆண்டுகள் ஆகியும்கூட கூட்டுறவு வங்கி நிர்வாகம் கண்டுகொள்ளாமல், இதுவரை பணப்பலன்கள் வழங்காததால் ஒரு குடும்பமே போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story