கடையம் அருகே பரபரப்பு கோவிலில் பொதுமக்கள் குடியேறும் போராட்டம்
கடையம் அருகே கோவிலில் பொதுமக்கள் குடியேறும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடையம்,
கடையம் அருகே கோவிலில் பொதுமக்கள் குடியேறும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமசாமி கோவில்
நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள புங்கம்பட்டியில் ராமசாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஊர் பொதுமக்கள் சார்பில், கொடை விழா நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த வைரவன் குடும்பத்தினர் சிலர் கோவில் கொடை விழாவிற்கு வரி கொடுக்காமல் தனியாக கொடை விழா நடத்தப்போவதாக கூறினர். இதற்கு ஊர் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே வைரவன் மதுரை ஐகோர்ட்டில் கோவில் கொடை விழா நடத்த அனுமதிக்கோரி மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி கொடை விழா நடத்த அனுமதி வழங்குவது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் தாசில்தார் முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அம்பை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் வெங்கடேஷ் தலைமையில், இருதரப்பினரையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. அப்போது ஊர் பொதுமக்கள் வைரவன் குடும்பத்தினர் தனியாக கோவில் கொடை விழா நடத்த எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது தாசில்தார் வெங்கடேஷ் ஊர் பொதுமக்களிடம் நீங்கள் கோர்ட்டை அணுகி உரிய உத்தரவு பெறுமாறு கூறினார்.
குடியேறும் போராட்டம்
இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வைரவன் குடும்பத்தினர் கோவில் கொடை விழா நடத்த ஏற்பாடு செய்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கோர்ட்டில் உத்தரவு வாங்க முடியாது என்று கூறியும் ஊர் பொதுமக்கள் நேற்று காலை அங்குள்ள பெரியம்மன் கோவிலில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் மதியம் அங்கேயே சமைத்து சாப்பிட்டனர். தொடர்ந்து உரிய முடிவு எடுக்கும் வரை கோவிலை விட்டு வெளியேற மாட்டோம் என்று கூறி கோவில் வளாகத்திலேயே தங்கியுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story