வேப்பூர் பகுதியில் கனமழை: காட்டாற்று வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது


வேப்பூர் பகுதியில் கனமழை: காட்டாற்று வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது
x
தினத்தந்தி 15 Sept 2019 4:15 AM IST (Updated: 15 Sept 2019 1:56 AM IST)
t-max-icont-min-icon

வேப்பூர் பகுதியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது.

வேப்பூர்,

வேப்பூர் பகுதியில் கடந்த 2 நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் வேப்பூர், காட்டுமயிலூர், கீழக்குறிச்சி, மாளிகைமேடு உள்ளிட்ட பகுதிகளில் கூரைவீடுகள் சேதமடைந்தன. மேலும் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த வாழை, மரவள்ளி உள்ளிட்ட பயிர்களும் காற்றுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சாய்ந்தன.

இதற்கிடையே காட்டுமயிலூர், கீழக்குறிச்சி பகுதி வனப்பகுதியில் கொட்டி தீர்த்த மழையால் அங்கிருந்து வரும் ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில் கீழக்குறிச்சி கிராம பகுதிகளில் இருந்து காட்டுமயிலூர் கிராமத்துக்கு வரும் வகையில் அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக தரைப்பாலம் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

காட்டுமயிலூர்-கீழக்குறிச்சி இடையே ஓடையின் குறுக்கே ஏற்கனவே தரைப்பாலம் இருந்து வந்தது. இதில் மழைக்காலங்களில் ஓடையில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரால் கீழக்குறிச்சி பகுதியை சேர்ந்த மக்கள் காட்டுமயிலூர் வழியாக வேப்பூருக்கு வருவதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து அந்த பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, தற்போது அங்கு புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதில் பெரும்பான்மையான பணிகள் முடிவடைந்து விட்டன. விரைவில் திறப்பு விழா காண இருக்கிறது. பாலம் கட்டுமான பணி காரணமாக கிராம மக்கள் பயன்பெறும் வகையில் தான் தற்காலிகமாக அங்கு தரைப்பாலம் அமைத்து கொடுக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த பாலம் தான் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இருக்கிறது. இதனால் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்தின் வழியாக தற்போது வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த நிலையில் தொடர்ந்து நேற்று 2-வது நாளாக வேப்பூர் பகுதியில் மழை பெய்தது. பருவமழை காலம் விரைவில் தொடங்க உள்ளதால், ஓடையில் அதிகளவில் தண்ணீர் செல்லும் வாய்ப்பு இருக்கிறது. எனவே கிராம மக்களின் நலன் கருதி புதிய பாலம் கட்டுமான பணியை முழுமையாக முடித்து, பொதுமக்கள் பாதுகாப்பான போக்குவரத்தை மேற்கொள்ளும் வகையில் பாலத்தை திறந்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story