மனுநீதி நாள் முகாம் : பயனாளிகளுக்கு ரூ.4¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் வழங்கினார்


மனுநீதி நாள் முகாம் : பயனாளிகளுக்கு ரூ.4¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 15 Sept 2019 4:45 AM IST (Updated: 15 Sept 2019 1:57 AM IST)
t-max-icont-min-icon

மனுநீதி நாள் முகாமில் பயனாளிகளுக்கு ரூ.4¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் தெங்குமரஹாடா பகுதியில் மனுநீதி நாள் முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றது. முகாமுக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதியோர், முதிர்கன்னி, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை 11 பேருக்கும், விலையில்லா சலவை பெட்டி 2 பேருக்கும், நீர் தெளிப்பான் கருவி 20 பேருக்கும், திசு வளர்ப்பு வாழை கன்று 200 பேருக்கும், ஆரஞ்சு நாற்றுகள் 100 பேருக்கும், புதிய குடும்ப அட்டை 2 பேருக்கும், பழங்குடியினர் சாதி சான்று 20 பேருக்கும் என மொத்தம் 355 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

மனுநீதி நாள் முகாமில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் உங்களை தேடி உங்கள் கிராமத்திற்கு வந்து உள்ளனர். தமிழக அரசு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி, அவை பொதுமக்களை சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறது. ஆனால் பழங்குடியின மக்கள் குறைந்த அளவிலேயே பயன் அடைகின்றனர். எனவே தான் முகாம் பழங்குடியின மக்கள் வாழும் இடங்களை தேடி வந்து நடத்தப்படுகிறது. நீங்கள் ஒருங்கிணைந்து அரசின் அனைத்து திட்டங்களையும் தெரிந்து கொண்டு பயனடைய வேண்டும்.

படித்த பெண்களுக்கு திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம், முதல்-அமைச்சரின் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், முத்துலெட்சுமி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. எனவே கர்ப்பிணி பெண்கள் தங்களது ஊரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அங்கன்வாடி மையத்தில் பதிவு செய்து கொண்டு தவறாமல் எடை எடுத்து, மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அங்கன்வாடி மையத்தில் வழங்கப்படும் சத்துணவு மாவினை தவறாமல் வாங்கி உண்ண வேண்டும். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் குன்னூர் உதவி கலெக்டர் ரஞ்சித் சிங், நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Next Story