நீலகிரியில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க நடவடிக்கை - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு


நீலகிரியில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க நடவடிக்கை - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு
x
தினத்தந்தி 15 Sept 2019 5:00 AM IST (Updated: 15 Sept 2019 1:57 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊட்டியில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி, மானிய விலையில் மகளிருக்கு இருசக்கர வாகனம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு பொதுப்பணித்துறை, பேரூராட்சி, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிசை மாற்று வாரியம் உள்ளிட்ட துறைகளின் சார்பில் ரூ.20 கோடியே 43 லட்சத்தில் 17 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

ஊரக வளர்ச்சித்துறை, தோட்டக்கலைத்துறை, பொதுப்பணித்துறை சார்பில் ரூ.6 கோடியே 16 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட 17 சாலை மற்றும் கட்டிடங்களை திறந்து வைத்தார். 1,074 பேருக்கு ரூ.2 கோடியே 68 லட்சத்து 50 ஆயிரம் மானியத்தில் இருசக்கர வாகனங்கள், பள்ளி மாணவ-மாணவிகள் 7 ஆயிரத்து 300 பேருக்கு விலையில்லா மடிக்கணினிகள் உள்பட 8 ஆயிரத்து 923 பயனாளிகளுக்கு ரூ.23 கோடியே 45 லட்சத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் தொட்டபெட்டா மலைசிகரத்துக்கு செல்லும் சாலை ரூ.1.89 கோடி செலவில் சீரமைக்கப்பட்டு இன்று(நேற்று) திறந்து வைக்கப்பட்டு உள்ளது. அங்கு இணைப்பு சாலையை சீரமைக்க ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் கோரிக்கை வைத்தார். அதை ஏற்று நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும். பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.89 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட 2 ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடங்கள், பல்நோக்கு கட்டிடம் மற்றும் கோழிப்பண்ணை கட்டிடம், தும்மனட்டி அரசு தோட்டக்கலைப் பண்ணை அலுவலக கட்டிடம், ரோஜா பூங்கா மற்றும் சிம்ஸ் பூங்காவில் கட்டப்பட்ட அலுவலக கட்டிடங்கள், முள்ளன்வயல், எருமாடு, மசினகுடி ஆகிய பகுதிகளில் கட்டப்பட்ட சுகாதார நிலையங்கள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டு உள்ளது.

ஊட்டி நகராட்சி கோடப்பமந்து கால்வாயில் ரூ.5 கோடி மதிப்பில் பாதாள சாக்கடையை சீரமைக்கும் பணி, கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட ஒரசோலை பகுதியில் ரூ.1 கோடி செலவில் சாலை பணிகள், 11 பேரூராட்சிகளில் ரூ.3.27 கோடி மதிப்பில் 112 குடிநீர் திட்ட பணிகள், 35 ஊராட்சிகளில் ரூ.2.62 கோடி செலவில் 86 குடிநீர் திட்ட பணிகள், பொதுப்பணித்துறை சார்பில் ரூ.3.48 கோடி மதிப்பில் ஊட்டி புதிய தாசில்தார் அலுவலக கட்டிடம் உள்பட மொத்தம் ரூ.20 கோடியே 43 லட்சம் மதிப்பில் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது.

குன்னூர் நகருக்கு குடிநீர் வழங்கும் வகையில் எமரால்டு கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு நீர்தேக்க தொட்டிகள் கட்டவும், குழாய்களை மாற்றியமைக்கவும் ரூ.56 லட்சம் நிதி கேட்கப்பட்டது. இதற்கான நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த மாவட்ட கலெக்டர்கள் கூட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி அமைக்கவும், தற்போது உள்ள மருத்துவமனையை மேம்படுத்தவும் கலெக்டர் வேண்டுகோள் விடுத்தார். இன்றும் அந்த கோரிக்கையை வைத்து உள்ளார். மருத்துவக்கல்லூரி அமைக்க நிதி மற்றும் இடம் தேவைப்படுவதால், சுகாதாரத்துறை அமைச்சருடன் கலந்து ஆலோசித்து முதல்-அமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்று அதற்கான நடவடிக்கையை மேற்கொள்வேன்.

தமிழகத்தில் 26 ஆயிரத்து 165 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.864 கோடி கடன் உதவி வழங்கப்பட்டு உள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் மகளிர் கடன் வழங்குவதில் முன்னோடியாக திகழ்கிறது. நடுவட்டம், தேவர்சோலை பேரூராட்சிகளில் பஸ் நிலையம் அமைக்க தலா ரூ.3 கோடி வீதம் ரூ.6 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. கூடலூர் பஸ் நிலையத்தை மேம்படுத்த வேண்டுமென பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டு உள்ளது. இந்த பஸ் நிலையம் அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு சொந்தமானது என்பதால், அதற்கான நிதியை போக்குவரத்துக்கழகத்துக்கு ரூ.4 கோடி வழங்கி மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2009-ம் ஆண்டு மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், நடப்பாண்டில் மழையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கும் ரூ.12.9 கோடி மதிப்பில் 144 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட உள்ளது. வீடுகளை இழந்தவர்களுக்கு குடியிருப்புகள் வழங்கப்படும். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நீலகிரியை சொந்த மாவட்டமாக கருதி செயல்படுவதாக தெரிவித்து இருந்தார். அதன்படி இன்றைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நீலகிரி மாவட்டத்துக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இவ்வாறு அவர் பேசினார். இதில் கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி.கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா, சாந்தி ராமு எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் புத்திசந்திரன், முன்னாள் எம்.பி.அர்ஜூணன், நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வினோத், என்.சி.எம்.எஸ். தலைவர் ஆல்தொரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக முதன்மை கல்வி அலுவலர் நாசரூதின் வரவேற்றார். முடிவில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு நன்றி கூறினார். முன்னதாக ஊட்டி-கோத்தகிரி சாலை சந்திப்பில் இருந்து தொட்டபெட்டா மலைசிகரத்துக்கு செல்லும் சாலை 2.6 கிலோ மீட்டர் தூரம் சீரமைக்கப்பட்டது. இதனை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.

பின்னர் அவர் மலைசிகரத்துக்கு சென்று, அங்குள்ள தொலைநோக்கி இல்லத்தில் இருந்த தொலைநோக்கி மூலம் ஊட்டியின் இயற்கை அழகை கண்டு ரசித்தார்.

Next Story