கம்பம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு விடுமுறை நாளில் தேர்வு எழுத வந்த மாணவிகள் ; பூட்டிக்கிடந்ததால் ஏமாற்றம்


கம்பம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு விடுமுறை நாளில் தேர்வு எழுத வந்த மாணவிகள் ; பூட்டிக்கிடந்ததால் ஏமாற்றம்
x
தினத்தந்தி 15 Sept 2019 4:30 AM IST (Updated: 15 Sept 2019 1:58 AM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு, விடுமுறை குறித்த தகவல் தெரியாமல் தேர்வு எழுத வந்த மாணவிகள் பள்ளி பூட்டிக்கிடந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

கம்பம்,

கம்பம் காந்திஜி பூங்கா அருகே ஆங்கூர்ராவுத்தர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் கம்பம், கூடலூர், க.புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து சுமார் 1,300 மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளியில் தற்போது காலாண்டுத்தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்த தேர்வுக்கான அட்டவணை கடந்த சில வாரங்களுக்கு முன்பு பள்ளி தகவல் பலகையில் ஒட்டப்பட்டது. அதன்படி மாணவிகள் தேர்வுக்கு தயாராகி ஒவ்வொரு நாளும் அட்டவணையில் உள்ளபடி தேர்வு எழுதி வருகின்றனர். இந்நிலையில் நேற்று 6, 7, 8-ம் வகுப்பு மாணவிகளுக்கு உடற்கல்வி தேர்வு மற்றும் சுற்றுச்சூழல் கல்வி தேர்வு நடைபெறுவதாக அட்டவணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று காலை மாணவிகள் வழக்கம் போல் தேர்வு எழுத பள்ளிக்கு வந்தனர்.

ஆனால் பள்ளிக்கூடம் பூட்டப்பட்டிருந்தது. இதைக் கண்டு மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்தநிலையில் பள்ளி கதவின் அருகில் உள்ள சுவரில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் உத்தரவு ஒட்டப்பட்டிருந்தது. இதில் காலாண்டு தேர்வுக்கான அட்டவணையில் நேற்று (14-ந்தேதி) நடைபெறுவதாக இருந்த உடற்கல்வி மற்றும் சுற்றுச்சூழல் கல்வி தேர்வு வருகிற 19-ந்தேதி மாற்றி நடைபெறும் என தெரிவிக்கப்படுவதாகவும், பள்ளி நாட்காட்டியில் 14-ந்தேதி(நேற்று) விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளதால் அதனை செயல்படுத்திட அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுவதாகவும் கூறப்பட்டிருந்தது. இதனை படித்து புரிந்து கொண்ட மாணவிகள் ஏமாற்றத்துடன் வீட்டிற்கு திரும்பி சென்றனர்.

இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) மகேஸ்வரி கூறும்போது, இன்று (நேற்று) பள்ளி விடுமுறை என்றும், இன்று நடைபெறவிருந்த உடற்கல்வி மற்றும் சுற்றுச்சூழல் கல்வி தேர்வை வருகிற 19-ந்தேதி நடத்த வேண்டும் என்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்தார். இந்த தகவல் 12-ந்தேதி (வியாழக்கிழமை) மதியம் கிடைத்தது. இதனால் அன்று காலையில் தேர்வு எழுதி விட்டு வீட்டுக்கு திரும்பிய 6, 7, 8-ம் வகுப்பு வெளியூர் மாணவிகளுக்கு தகவல் சரியாக கிடைக்கவில்லை. 13-ந்தேதி 6, 7, 8-ம் வகுப்புக்கு தேர்வு கிடையாது. எனவே இதுபற்றி மேல்நிலைக்கல்வி பயிலும் மாணவிகள் மூலம் தகவல் பரிமாறப்பட்டது. எனினும் தகவல் கிடைக்காத வெளியூர் மாணவிகள் மட்டும் பள்ளிக்கு வந்து திரும்பி சென்றுள்ளனர் என்றார்.

Next Story