வேலூர் மாவட்டத்தில் 1,178 பேனர்கள் அகற்றம் அனுமதியின்றி வைத்தால் குற்றவியல் நடவடிக்கை என கலெக்டர் எச்சரிக்கை


வேலூர் மாவட்டத்தில் 1,178 பேனர்கள் அகற்றம் அனுமதியின்றி வைத்தால் குற்றவியல் நடவடிக்கை என கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 15 Sept 2019 4:15 AM IST (Updated: 15 Sept 2019 2:32 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டம் முழுவதும் வைக்கப்பட்டிருந்த 1,178 பேனர்களை அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர். அனுமதியின்றி வைத்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வேலூர், 

சென்னையில் சுபஸ்ரீ என்ற பெண் என்ஜினீயர் மீது பேனர் விழுந்து, விபத்தில் சிக்கி பலியானார். இந்த சம்பவத்துக்கு கோர்ட்டு கண்டனம் தெரிவித்து, சட்டவிரோதமாக பேனர் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் விதிமுறைகளை மீறி பேனர் வைப்பவர்களுக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் விதிகளை மீறி பேனர் வைப்பவர்களுக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனால் வேலூர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் அரசியல் கட்சியினர், கோவில் திருவிழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக வைத்திருந்த பெரும்பாலான பேனர்களை, அதை வைத்தவர்களே அகற்ற தொடங்கினர்.

இந்த நிலையில் வேலூர் மாநகராட்சி பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்ற மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் உத்தரவிட்டார். அதன்பேரில் பேனர் வைத்தவர்களே சிலர் அதை அகற்றினாலும், ஒரு சில பகுதிகளில் பேனர்கள் அகற்றப்படாமல் இருந்தது. இதனை மாநகராட்சி அதிகாரிகள் தலைமையில், ஊழியர்கள் நேற்று காலை முதல் அகற்றத்தொடங்கினர்.

அதேபோன்று நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் வைக்கப்பட்ட பேனர்கள், விளம்பர பலகைகள் என அனைத்தையும் அகற்றும் பணிகளில் அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டனர். அதன்படி வேலூர் மாநகராட்சி பகுதியில் 110 பேனர்கள், 8 விளம்பர பலகைகள், நகராட்சி பகுதிகளில் 254 பேனர்கள், பேரூராட்சி பகுதிகளில் 99 பேனர்கள், ஊராட்சி பகுதிகளில் 686 பேனர்கள், 20 விளம்பர பலகைகள் என மொத்தம் 1,178 பேனர்கள் அகற்றப்பட்டன.

மேற்படி பேனர்களை சட்டவிரோதமாக வைத்த நபர்களை கண்டறிந்து அவர்கள்மீது நடவடிக்கை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே இனிவருங்காலங்களில் அனுமதியின்றி பேனர்கள் வைத்தால் அவர்கள்மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

Next Story