விதிகளை மீறி யார் பேனர் வைத்தாலும் கடும் நடவடிக்கை - அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை


விதிகளை மீறி யார் பேனர் வைத்தாலும் கடும் நடவடிக்கை - அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை
x
தினத்தந்தி 15 Sept 2019 4:30 AM IST (Updated: 15 Sept 2019 2:32 AM IST)
t-max-icont-min-icon

விதிகளை மீறி யார் பேனர் வைத்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

சேலம், 

சேலம் 5 ரோடு தொழிற்பேட்டை பகுதியில் அரசு கிளை அச்சகம் உள்ளது. இந்த அச்சகத்தில் நேற்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு செய்தார். அப்போது அவர் அச்சகம் செயல்படும் விதம் குறித்தும், தேவையான வசதிகள் குறித்தும் ஊழியர்களிடம் கேட்டறிந்தார். இதையடுத்து அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த அரசு அச்சகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான அனைத்து ஆவணங்களும் அச்சிடப்படுகின்றன. அரசின் அனைத்துத்துறை ஆவணங்களையும் அரசு அச்சகத்திலேயே அச்சிடும் வசதி இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் உள்ளது.

அச்சகத்துறையில் தான் மாற்றுத்திறனாளிகளுக்கு 13 சதவீதம் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. சேலம் அரசு அச்சகம் சுமார் 2.87 ஏக்கர் பரப்பளவில் சொந்த கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த கட்டிடம் கட்டி 30 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால் விரைவில் புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். துறை இயக்குனர் நேரடியாக இங்கு ஆய்வு செய்து அதற்கான திட்ட மதிப்பீட்டை தயார் செய்வார்.

சென்னையில் பேனர் சரிந்து விழுந்து இளம்பெண் பலியான சம்பவம் எதிர்பாராமல் நடந்தது. இந்த சம்பவத்திற்கு அரசு எப்படி பொறுப்பேற்க முடியும். இருப்பினும் இதைத்தொடர்ந்து அனைத்துத்துறை அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் ஆலோசனை நடத்தினார். மேலும் முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் பொதுமக்களுக்கு இடையூறாக பேனர் வைக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளனர். இதற்கு நாங்கள் கட்டுப்படுவோம். திரையரங்குகள் அரசு விதிகளுக்குட்பட்டு பேனர் வைத்து கொள்ளலாம்.

பேனர் வைக்க அனுமதிக்கப்படும் இடங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதே சமயம் விதிகளை மீறி யார் பேனர் வைத்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆளுங்கட்சியினர் போலீசாரை நிர்பந்தப்படுத்தி பேனர் வைப்பதாக கூறுவதில் உண்மையல்ல. சென்னையில் நடந்த விவகாரத்தில் முதற்கட்டமாக பேனரை அச்சடித்த அச்சகத்துக்கு சீல் வைத்துள்ளோம். மேலும் இந்த பேனர் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கும் நோட்டீஸ் வழங்கி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ., சேலம் அச்சக கிளை மேலாளர் விஜய சுகந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story