போலீசில் வழக்கு உள்ளதால் பெண் கொடுக்க மறுப்பு; மின்கம்பத்தில் தூக்குப்போட்டு கட்டிட மேஸ்திரி தற்கொலை
போலீசில் வழக்கு உள்ளதை காரணம் காட்டி திருமணத்துக்கு பெண் கொடுக்க மறுப்பவர்களால் விரக்தியடைந்த கட்டிட மேஸ்திரி மின்கம்பத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சோக சம்பவம் குறித்து கூறப்படுவதாவது:-
போளூர்,
போளூர் அல்லிநகர் நடேசன் தெருவில் வசிப்பவர் ரவி. இவரது மகன் மணிகண்டன் (வயது 30) கட்டிட மேஸ்திரியாக வேலை செய்தார். இவருக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர்கள் பல இடங்களில் பெண் பார்த்தனர். ஆனால் மணிகண்டன் மீது போலீசில் வழக்கு உள்ளதாக கூறப்படுகிறது. இதனை காரணம் காட்டி பலர் பெண் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது.
இதனால் அடிக்கடி வீட்டில் பெற்றோர்களிடம் வாக்குவாதம் சண்டை ஏற்பட்டுள்ளது. விரக்தியடைந்த நிலையில் காணப்பட்ட மணிகண்டன், கடந்த 11-ந் தேதி காலை வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டார். அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதற்கிடையே போளூர் பெரிய ஏரி அருகில் டோனிமலை அருகே மின் கம்பத்தில் மணிகண்டன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அவர் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.
தகவல் அறிந்த சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மணிகண்டனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்படவே அவர்கள், மருத்துவமனைக்கு வந்தனர். பிணத்தை பார்வையிட்ட அவர்கள் இறந்தவர் மகன் மணிகண்டன் தான் என்று அடையாளம் காண்பித்தனர். அவரது சாவு குறித்து போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story