ஆம்பூரில் 2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - அதிகாரிகள் சோதனையில் சிக்கியது


ஆம்பூரில் 2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - அதிகாரிகள் சோதனையில் சிக்கியது
x
தினத்தந்தி 15 Sept 2019 3:15 AM IST (Updated: 15 Sept 2019 2:34 AM IST)
t-max-icont-min-icon

ஆம்பூரில் 2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அபராதமும் விதிக்கப்பட்டது.

ஆம்பூர், 

ஆம்பூர் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் ஓட்டல்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதாகவும், பயன்படுத்துவதாகவும் புகார்கள் வந்தன. அதன்பேரில் நகராட்சி ஆணையாளர் சவுந்தரராஜன் தலைமையில், துப்புரவு அலுவலர் பாஸ்கர் மற்றும் நகராட்சி பணியாளர்கள் உமர்ரோடு, எஸ்.ரோடு, பைபாஸ் சாலை, சான்றோர்குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள், ஓட்டல்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது உமர்ரோட்டில் உள்ள ஒரு கடையில் மூட்டை, மூட்டையாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அதிகாரிகள் அங்கிருந்து 1½ டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, அந்த கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

இதேபோல பல்வேறு கடைகளில் இருந்தும் ½ டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, அந்த கடைகளுக்கு ரூ.8,500 அபராதம் விதித்தனர். கொசு உற்பத்தியை ஏற்படுத்திய ஓட்டலுக்கு ரூ.2,500 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் நகரின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த பேனர்களையும் அகற்றினர். அப்போது சில பகுதியில் ஒரு நாள் மட்டும் அனுமதி கொடுக்கும்படி அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் சவுந்தரராஜன் கூறுகையில், ஆம்பூர் நகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த பொதுமக்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து துப்புரவு பணியாளர்கள் வரும் போது கொடுக்க வேண்டும்’ என்றார்.

Next Story