ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் - கலெக்டர் பேச்சு
ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் கூறினார்.
குடியாத்தம்,
கே.வி.குப்பத்தில் முன்னாள் ராணுவ வீரர் நலசேவை மைய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. மைய தலைவர் ஜெ.குமார் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் மேஜர் எம்.தனபால், கமாண்டர் கே.செந்தில்குமார், கர்னல் டி.கங்காதரன், ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் கே.எம்.ஐ.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் எம்.முனிரத்தினம் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக கலெக்டர் ஏ.சண்முகசுந்தரம், கே.வி.குப்பம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும், முன்னாள் ராணுவ வீரருமான ஜி.லோகநாதன் ஆகியோர் கலந்துகொண்டு நலசேவை மைய கட்டிடத்தை திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றி சிறப்புரை ஆற்றினர்.
விழாவில் கலெக்டர் ஏ.சண்முகசுந்தரம் பேசியதாவது:-
வேலூர் கோட்டையில் 1806-ம் ஆண்டு ஏற்பட்ட சிப்பாய் புரட்சிதான் இந்திய சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்ட முதல் போராட்டம் ஆகும். அத்தகைய பெருமைக்குரியது வேலூர் மாவட்டம்.
நாட்டின் எல்லைகளை பாதுகாக்க கூடிய வீரர்களின் விழாவில் கலந்து கொள்வது கலெக்டரின் கடமை. நான் 1993-ம் ஆண்டு முதலில் பி.எஸ்.எப். உதவி கமாண்டர் பணிக்கு தேர்வு ஆனேன். அகில இந்திய அளவில் 7-வது இடத்தில் வந்தேன். பின்னர் சிவில் சர்வீஸ் பணியின் மேல் ஈடுபாடு ஏற்பட்டு மாறினேன்.
ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். தமிழகத்தில் இருந்து வங்கி, ரெயில்வே, சிவில் சர்வீஸ், ராணுவம் போன்ற தேர்வுகளுக்கு நிறைய பேர் செல்கின்றனர். இருப்பினும் அவர்களுக்கு சரியான விழிப்புணர்வு இல்லை. அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
காவல் மன்றத்தில் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை சேர்க்க வேண்டும். இதனால் அவர்கள் ராணுவ பணிக்கு செல்ல முன்னுரிமை கிடைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் ஓய்வு பெற்ற முப்படை ராணுவ வீரர்கள், அவர்களது குடும்பத்தினர்கள் கலந்துகொண்டனர். முடிவில் சேவை மைய செயலாளர் எம்.ஏசுபாதம் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story