அருப்புக்கோட்டையில் நகைபட்டறை அதிபர் ஓட்டி சென்ற கார் கால்வாய்க்குள் பாய்ந்தது


அருப்புக்கோட்டையில் நகைபட்டறை அதிபர் ஓட்டி சென்ற கார் கால்வாய்க்குள் பாய்ந்தது
x
தினத்தந்தி 15 Sep 2019 10:00 PM GMT (Updated: 15 Sep 2019 2:32 PM GMT)

அருப்புக்கோட்டையில் நகை பட்டறை அதிபர் ஓட்டி சென்றபோது தாறுமாறாக ஓடிய கார் கால்வாய்க்குள் பாய்ந்தது. மற்றொரு காரும் விபத்தில் சிக்கியது.

அருப்புக்கோட்டை,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை–திருச்சுழி ரோட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் 2 கார்கள் மின்னல் வேகத்தில் சென்றன. சினிமாவில் வரும் ரேஸ் காட்சி போல இந்த கார்கள் போட்டி போட்டு கொண்டு ஒன்றை ஒன்று முந்தி சென்றன. நள்ளிரவு நேரம் என்பதால் சாலையில் வாகன போக்குவரத்து அதிகம் இல்லை. இதனால் இந்த கார்கள் சீறிப்பாய்ந்து சென்று கொண்டிருந்தன. அருப்புக்கோட்டை அருகே காந்தி நகர் பகுதியில் வாகன சோதனையில் நின்ற போலீசார் கார்கள் வேகமாக வருவதை பார்த்ததும் அதை நிறுத்த முயன்றனர். ஆனால் கார்கள் நிற்காமல் சென்றன. இதனால் போலீசார் அந்த கார்களை பின் தொடர்ந்து விரட்டி சென்றனர்.

இதை பார்த்தும் காரை ஓட்டி சென்றவர்கள் போலீசில் சிக்காமல் இருக்க காரின் வேகத்தை இன்னும் அதிகரித்ததாக தெரிகிறது.

அருப்புக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே சென்றபோது இந்த இரண்டு கார்களும் கட்டுப்பாட்டை இழந்து ஒன்றுக்கொன்று இடித்து கொண்டன. இதில் ஒரு கார் பஸ் நிலையத்தின் நுழைவுவாயில் தூண்கள் மீது மோதியது. இதில் அந்த காரின் முன் பகுதி சேதமடைந்தது. மற்றொரு கார் அருகே உள்ள கழிவுநீர் கால்வாய்க்குள் பாய்ந்தது. இதை பார்த்ததும் பஸ் நிலையத்தில் நள்ளிரவில் பஸ்சுக்காக காத்திருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அங்கு ஓடினர். அதற்குள் போலீசாரும் வந்து சேர்ந்தனர்.

இதைதொடர்ந்து ஜே.சி.பி. எந்திரம் வரவழைக்கப்பட்டு கால்வாயில் விழுந்த கார் மற்றும் பஸ் நிலைய நுழைவுவாயில் தூண் மீது மோதிய காரும் மீட்கப்பட்டது. காரில் இருந்தவர்களுக்கு லேசான காயம் மட்டுமே ஏற்பட்டு இருந்தது. இதையடுத்து காரில் இருந்தவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் நகை பட்டறை அதிபர்கள் என தெரியவந்தது. ஒரு காரை ஓட்டி வந்தது கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த கார்த்திக்(வயது 34) என்பதும், மற்றொரு காரை ஓட்டி வந்தவர் மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த பிரசன்ன வெங்கடேஷ்(27) என்பதும் தெரிந்தது.

இவர்கள் அருப்புக்கோட்டையில் நகைக்கடை உரிமையாளர் இல்ல விஷேசத்தில் கலந்து கொள்ள வந்துள்ளனர். அப்போது மதுபோதையில் காரில் யார் முந்தி செல்வது என அவர்கள் போட்டி போட்டு சென்றுள்ளனர். அது கடைசியில் விபத்தில் முடிந்துள்ளது.

இதுகுறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story