மதுரை புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் பிரசவம் பார்த்த கர்ப்பிணி உயிரிழப்பு “தவறான சிகிச்சையே காரணம்” என புகார்


மதுரை புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் பிரசவம் பார்த்த கர்ப்பிணி உயிரிழப்பு “தவறான சிகிச்சையே காரணம்” என புகார்
x
தினத்தந்தி 15 Sep 2019 11:00 PM GMT (Updated: 15 Sep 2019 2:41 PM GMT)

மதுரையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் பிரசவம் பார்த்ததால் கர்ப்பிணி இறந்துபோன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதூர்,

மதுரை கோ.புதூர் இ.எம்.ஜி. நகர் 2–வது தெருவைச் சேர்ந்தவர் மணிமுத்து (வயது 29). இவருடைய மனைவி சக்திகாளி (22). இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இதனைத் தொடர்ந்து சக்திகாளி கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவரை பிரசவத்திற்காக நேற்று முன்தினம் புதூர் பிரதான சாலையில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு சில பரிசோதனைகள் செய்யப்பட்டது. மேலும் இரவு 8 மணிக்கு குழந்தை பிறக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். ஆனால், இரவு 8 மணிக்கு குழந்தை பிறக்கவில்லை.

இந்த நிலையில் அங்கு சிகிச்சையில் இருந்த சக்திகாளிக்கு குழந்தை பிறக்காத நிலையில் அவரும் பரிதாபமாக இறந்து விட்டார். இந்த தகவலை மருத்துவமனை ஊழியர்கள், மணிமுத்துவிடம் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது மனைவியை எப்படியும் காப்பாற்றி விடலாம் என்று ஆம்புலன்சு மூலம் மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சக்திகாளி இறந்து விட்டதை உறுதிப்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் உள்ள பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் பணியில் இல்லாத நிலையில் செவிலியரின் தவறான சிகிச்சையாலேயே சக்திகாளி உயிரிழந்து விட்டதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து மணிமுத்து கூறும்போது, எனது மனைவியை 14–ந்தேதி மதியம் 2 மணிக்கு புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தேன். அப்போது டாக்டர் பரிசோதனை செய்து விட்டு, தாயும் குழந்தையும் நலமாக உள்ளதாக தெரிவித்தனர். மேலும், இரவு 8 மணிக்கு குழந்தை பிறந்துவிடும் என்றும் கூறினர். இரவு 9 மணிக்கு எனது உறவினர்கள் அங்கிருந்த செவிலியரிடம் கேட்டபோது குழந்தை 9 மணிக்கு மேல் பிறக்கும் என்று கூறினார்.

இதற்கிடையே, என் மனைவியின் அலறல் சத்தம் அதிகமாக கேட்டுக்கொண்டே இருந்தது. பின்பு எங்களையும், உறவினர்களையும் உள்ளே அனுமதிக்கவில்லை. நள்ளிரவில் எனது மனைவியை என்னிடம் அனுப்பி விடுங்கள், நான் வேறு மருத்துவமனை கொண்டு செல்கிறேன் என்று கூறினேன். இதற்கு ஆஸ்பத்திரியில் செவிலியர்கள் மறுத்துவிட்டனர். ஆஸ்பத்திரிக்கு வந்தால் வெளியில் அனுப்ப மாட்டோம் என்று கூறினர்.

இதனை தொடர்ந்து உள்ளே சென்று பார்த்தபோது ரத்தப்போக்கு அதிகமாக எனது மனைவி இறந்தது தெரியவந்தது. அவரது முகத்தில் காயங்களும் இருந்தன. என் மனைவியின் இறப்பில் சந்தேகம் உள்ளது. மருத்துவமனையில் இரவு பணியில் டாக்டர் இல்லை, செவிலியர் மட்டுமே இருந்தார். தவறான சிகிச்சையால் தான் என் மனைவி இறந்தார். மனைவியின் இறப்பில் சந்தேகம் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுபோல், மனைவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக புதூர் போலீசிலும் மணிமுத்து புகார் அளித்துள்ளார். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் பிரசவம் பார்த்த இளம் கர்ப்பிணி பெண் இறந்து போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story