பவானி அருகே டிரைவருக்கு மயக்க மருந்து கொடுத்து லாரியை கடத்தியவர் கைது மேலும் 3 பேருக்கு வலைவீச்சு


பவானி அருகே டிரைவருக்கு மயக்க மருந்து கொடுத்து லாரியை கடத்தியவர் கைது மேலும் 3 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 15 Sep 2019 11:00 PM GMT (Updated: 15 Sep 2019 3:06 PM GMT)

பவானி அருகே டிரைவருக்கு மயக்க மருந்து கலந்து கொடுத்து லாரியை கடத்தியவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

பவானி,

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகன் கார்த்திக் (வயது 27). இவர் லாரியை வாடகைக்கு எடுத்து ஓட்டி வருகிறார். இவரிடம் சம்பவத்தன்று 4 பேர், ‘ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள காஞ்சிக்கோவிலில் இருந்து பல்லடத்துக்கு நாங்கள் வீடு மாற்றப்போகிறோம். எனவே அங்கிருந்து வீட்டு சாமான்களை ஏற்றிக்கொண்டு பல்லடத்துக்கு வர லாரி வேண்டும் என்று கூறினர். இதைத்தொடர்ந்து கார்த்திக் லாரியை எடுத்துக்கொண்டு அவர்கள் 4 பேருடன் காஞ்சிக்கோவில் புறப்பட்டார்.

பெருந்துறையை அடுத்த பெத்தாம்பாளையம் அருகே சென்றபோது 4 பேரும் சேர்ந்து கார்த்திக்கிற்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளனர். இதை குடித்த அவருக்கு தலைசுற்றல் வந்தது. இதனால் கார்த்திக்கை மீட்டு பவானி அருகே உள்ள சித்தோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் 4 பேரும் அவருடைய லாரியை அங்கிருந்து கடத்தி சென்றுவிட்டனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் சித்தோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிர்வேல் வழக்குப்பதிவு செய்து லாரியை கடத்திய 4 பேரை வலைவீசி தேடிவந்தார். மேலும் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர் உத்தரவின் பேரில், குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முத்து தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் பவானி அருகே நசியனூர்–காஞ்சிக்கோவில் புறவழிச்சாலையில் உள்ள பாலம் அருகே நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக லாரியுடன் ஒருவர் வேகமாக வந்து கொண்டிருந்தார். இதனால் அந்த லாரியை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் லாரி நிற்காமல் அங்கிருந்து சென்றுவிட்டது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் ஜீப்பில் லாரியை துரத்தி சென்றனர். சுமார் 1 கி.மீ. தூரத்தில் லாரியை மடக்கி பிடித்தனர்.

பின்னர் டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர், கோபி பாரியூர் ரோடு நஞ்சகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன் மகன் பிரசாந்த்(25) என்பதும், இவர் தான் கார்த்திக்கின் லாரியை கடத்திக்கொண்டு விற்பதற்காக பெங்களூரு சென்றபோது போலீசாரிடம் பிடிபட்டதும் தெரியவந்தது.

மேலும், இந்த லாரி கடத்தலில் பிரசாந்துடன் சேர்ந்து கிருஷ்ணமூர்த்தி, பவானி, அரவிந்த் ஆகிய 3 பேர் ஈடுபட்டதும், இதில் கிருஷ்ணமூர்த்தி மூளையாக செயல்பட்டதும், பிரசாந்தை தவிர மற்ற 3 பேரும் ஏற்கனவே பெங்களூரு சென்றுவிட்டதும் தெரியவந்தது. இதைதத்தொடர்ந்து லாரியை கடத்தியதாக பிரசாந்தை போலீசார் கைது செய்தனர். மற்ற 3 பேரும் பெங்களூருவில் உள்ளதால் அவர்களை தேடி தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.

Next Story