பெருந்துறை அருகே தூக்குப்போட்டு என்ஜினீயர் தற்கொலை வேலை கிடைக்காத விரக்தியில் விபரீதம்


பெருந்துறை அருகே தூக்குப்போட்டு என்ஜினீயர் தற்கொலை வேலை கிடைக்காத விரக்தியில் விபரீதம்
x
தினத்தந்தி 16 Sept 2019 4:15 AM IST (Updated: 15 Sept 2019 8:38 PM IST)
t-max-icont-min-icon

பெருந்துறை அருகே வேலை கிடைக்காத விரக்தியில் என்ஜினீயர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெருந்துறை,

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே விஜயமங்கலம் ரெயில் நிலை பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 55). இவர் பெருந்துறை சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி கிருஷ்ணவேணி (50). இவர்களுடைய மகள் மேனகாதேவி (27), மகன் பிரகாஷ் (25). மேனகாதேவி, திருமணம் ஆகி கணவருடன் வசித்து வருகிறார்.

பிரகாஷ், என்ஜினீயரிங் பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலை தேடி வந்தார். ஆனால் அவருக்கு படிப்புக்கேற்ற வேலை கிடைக்கவில்லை. இதனால் மற்ற துறைகளில் வேலை தேடினார். ஆனால் அவருக்கு அந்த வேலையும் கிடைக்கவில்லை. இதனால் அவர் மிகுந்த மனவிரக்தியில் இருந்தார். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரகாஷ், டி.என்.பி.எஸ்.சி. தேர்வும் எழுதியதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்றுக்காலை வழக்கம் போல் துரைசாமி, சிப்காட்டில் உள்ள நிறுவனத்திற்கு சென்றுவிட்டார். கிருஷ்ணவேணி வெளியே சென்று இருந்தார். பிரகாஷ் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவர் திடீரென வீட்டின் விட்டத்தில் மின்விசிறியின் கொக்கியில் கயிறு கட்டி தூக்கில் தொங்கினார். இந்த நிலையில் வெளியே சென்று இருந்த பிரகாசின் தாய் கிருஷ்ணவேணி வீட்டுக்கு வந்தார். அப்போது மகன் தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்ததோடு கதறி அழுதார்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று, தூக்கில் தொங்கிய பிரகாசை மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே பிரகாஷ் இறந்துவிட்டதாக கூறினார்கள்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் பெருந்துறை போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று, பிரகாசின் உடலை பார்வையிட்டனர். அப்போது அவரின் சட்டைப்பையில் கடிதம் ஒன்று இருந்தது. அந்த கடிதத்தில், ‘என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தும் எனக்கு உரிய வேலை கிடைக்கவில்லை. அதனால் இனியும் நான் உயிருடன் இருப்பது யாருக்கும் எந்தவித பிரயோஜனமும் இல்லை. எனவே நான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துவிட்டேன்’ என்று எழுதப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து பிரகாசின் உடல், பிரேத பரிசோதனை அறைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

தற்கொலை செய்து கொண்ட பிரகாசின் உடலை பார்த்து அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

Next Story