கரும்பு நிலுவைத்தொகை ரூ.110 கோடியை உடனே வழங்க வேண்டும்; குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்


கரும்பு நிலுவைத்தொகை ரூ.110 கோடியை உடனே வழங்க வேண்டும்; குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 16 Sept 2019 4:15 AM IST (Updated: 15 Sept 2019 10:33 PM IST)
t-max-icont-min-icon

கரும்பு நிலுவைத்தொகை ரூ.110 கோடியை உடனே வழங்க வேண்டும் என்று குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

விழுப்புரம்,

விழுப்புரம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோட்டாட்சியர் ராஜேந்திரன் தலைமை தாங்கி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார்.

கூட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர் ஆகிய தாலுகாக்களை சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசியதாவது:-

நமது கோட்டத்தில் கோடை உழவுக்கு ஏக்கருக்கு 500 ரூபாய் மானியம் விவசாயிகளுக்கு சரிவர வழங்குவதில்லை. அவற்றை உடனே வழங்க வேண்டும். அனைத்து ஒன்றியத்திலும் தகுதியான விவசாயிகளை விவசாய சுற்றுலாவிற்கு வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் அழைத்துச்செல்வதில்லை. உள்மாநில பயிற்சிக்கும் அழைத்துச்செல்வதில்லை. குறிப்பாக தோட்டக்கலைத்துறையில் பெண் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை.

தோட்டக்கலைத்துறை சார்பில் கடந்த 2013-14-ம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட நிதியை தற்போது 2019-20-ம் ஆண்டில் பயன்படுத்தி விவசாயிகளை சுற்றுலாவிற்கு அழைத்துச்சென்றுள்ளனர். அதுவும் பெயரளவிற்கு பெங்களூருவுக்கு அழைத்துச்சென்றனர். கடந்த 6 ஆண்டுகளாக விவசாயிகளை சுற்றுலாவிற்கு அழைத்துச்சென்று பயிற்சி அளிக்காதது ஏன்? அரசு ஒதுக்கும் நிதியை முழுமையாக விவசாயிகளுக்கு பயன்படுத்தாமல் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர்.

நீர் மேலாண்மைக்காக பல ஆயிரம் கோடி ரூபாயை அரசு செலவு செய்கிறது. குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரி சீரமைப்பு பணியை முறையாக மேற்கொள்ள வேண்டும். தமிழகம் முழுவதும் கரும்பு நிலுவைத்தொகை ரூ.400 கோடி பாக்கி உள்ளது. அவற்றில் நமது விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் ரூ.110 கோடி நிலுவைத்தொகை வழங்கப்படாமல் உள்ளது. பலமுறை வற்புறுத்தி கேட்டும் கரும்பு நிலுவைத்தொகை வழங்கப்படவில்லை.

இதே நிலை நீடித்தால் நாங்கள் கரும்பு பயிரை தவிர வேறு ஏதாவது பயிர் சாகுபடி செய்வோம். ஆனால் சர்க்கரை ஆலைகள் மூடப்பட்டால் விவசாயிகள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை, கரும்பு வெட்டக்கூடிய ஆலை தொழிலாளர்கள் மற்றும் சர்க்கரை ஆலை ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும். இதனை கருதி தான் ஆலையை ‘சீல்’ வைக்கக்கூட நாங்கள் சம்மதிக்கவில்லை. எனவே கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகையை விரைந்து வழங்க சர்க்கரை ஆலை நிர்வாகத்தினர் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர். இதனை கேட்டறிந்த கோட்டாட்சியர் ராஜேந்திரன், கோரிக்கைகள் மீது விரைவில் தீர்வு காணப்படும் என்றார்.

கூட்டத்தில் தாசில்தார்கள் கணேஷ், பார்த்திபன், தங்கமணி, சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் சங்கரலிங்கம், வருவாய் ஆய்வாளர்கள் சாதிக், ராஜேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story