கர்நாடக கோழை அரசுக்கு, மத்திய அரசை கேள்வி கேட்க தைரியம் இல்லை சித்தராமையா கடும் விமர்சனம்
கர்நாடகத்தில் உள்ள கோழை அரசுக்கு மத்திய அரசை கேள்வி கேட்கும் தைரியம் இல்லை என்று கூறி மாநில அரசை சித்தராமையா கடுமையாக விமர்சித்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் உள்ள கோழை அரசுக்கு மத்திய அரசை கேள்வி கேட்கும் தைரியம் இல்லை என்று கூறி மாநில அரசை சித்தராமையா கடுமையாக விமர்சித்துள்ளார்.
முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
தைரியம் இல்லை
கர்நாடகத்தில் மழை வெள்ளத்தால் ரூ.36 ஆயிரம் கோடி அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் மத்திய அரசு இதுவரை ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை. கர்நாடகத்தில் உள்ள கோழை அரசுக்கு, மத்திய அரசை கேள்வி கேட்கும் தைரியம் இல்லை. கர்நாடகத்தில் கடந்த 2009-ம் ஆண்டு எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்தார்.
அப்போதும் வட கர்நாடகத்தில் அதிகளவில் மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. இதனால் பெரிய அளவில் சேதம் உண்டானது. அப்போது பிரதமராக இருந்த மன்மோகன்சிங் கர்நாடகம் வந்து வெள்ள சேதங்களை பார்வையிட்டார். உடனடியாக ரூ.1,500 கோடி நிதி உதவியை வழங்கிவிட்டு சென்றார்.
விவசாயிகளுக்கு நோட்டீசு
இப்போது உள்ள பிரதமர் எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை?. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடனை செலுத்தும்படி விவசாயிகளுக்கு வங்கிகள் நோட்டீசுகள் அனுப்புகின்றன. மனிதநேயம் என்று ஒன்று இருந்தால் மாநில அரசு, விவசாயிகளுக்கு நோட்டீசு அனுப்புவதை உடனடியாக உடனே நிறுத்த வேண்டும்.
சிக்கமகளூரு, கதக், ஹாவேரி ஆகிய பகுதிகளில் வெள்ளத்தால் சொத்துகளை இழந்த விவசாயிகள் 5 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதேபோல் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் உள்ளனர். மத்திய-மாநில அரசுகள் இருந்தும், இல்லாதது போல் உள்ளன.
வற்புறுத்த வேண்டாம்
அடிக்கடி வெளிநாட்டுக்கு செல்லும் பிரதமர், கர்நாடகம் வந்து வெள்ளத்தில் சிக்கிய மக்களின் கஷ்டங்களை கேட்காதது வேதனை அளிக்கிறது. நமது விஞ்ஞானிகள் பகல்-இரவாக உழைத்து நிலவுக்கு சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் செலுத்தினர். அதை பார்க்க பிரதமர் இங்கு வந்தார். பிரதமர் வந்ததால் தான் அந்த விண்கலம் தனது இலக்கை அடையவில்லை.
எனது தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றபோது, விவசாயிகள் தற்கொலையை தடுக்க அன்ன பாக்கிய, ஷீர பாக்கிய உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அமல்படுத்தினோம். வெள்ள சேதங்களுக்கு நிதி ஒதுக்குமாறு வற்புறுத்த வேண்டாம் என்று கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை பார்க்கும்போது, மத்திய அரசு திவாலாகிவிட்டதை எடுத்துக் காட்டுவதாக உள்ளது. இது உண்மை இல்லை என்றால், மத்திய அரசு நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
Related Tags :
Next Story