கிராமப் புறங்களில் நீர் ஆதாரத்தை பெருக்க நிதி ஒதுக்க மத்திய அரசு தயார்; சோரப்பட்டில் ஆய்வு செய்த நோடல் அதிகாரி தகவல்


கிராமப் புறங்களில் நீர் ஆதாரத்தை பெருக்க நிதி ஒதுக்க மத்திய அரசு தயார்; சோரப்பட்டில் ஆய்வு செய்த நோடல் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 15 Sep 2019 10:30 PM GMT (Updated: 15 Sep 2019 6:20 PM GMT)

கிராமப்புறங்களில் நீர் ஆதாரத்தை பெருக்க மத்திய அரசு நிதி ஒதுக்க தயார் என்று நோடல் அதிகாரி தெரிவித்தார்.

திருக்கனூர்,

மத்திய அரசின் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பாரம்பரிய நீர் நிலைகளை பராமரித்து மேம்படுத்துதல், புதிய நீர்நிலைகளை உருவாக்குதல், நிலத்தடி நீர் செறிவூட்டுதல் போன்ற நீர் ஆதார பெருக்கு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக மத்திய அரசால், புதுவை மாநிலத்திற்கு பிரத்யேகமாக நியமிக்கப்பட்டுள்ள நோடல் அதிகாரியும், மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தின் துணை செயலருமான ரவீந்தர் மற்றும் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜெயக்குமார் ஆகியோர் நேற்று சோரப்பட்டு கிராமத்தில், ஊர் மக்களின் பங்களிப்புடன் தூர்வாரப்பட்ட அய்யனார் குளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதில் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜெயக்குமார், உதவி பொறியாளர் நாகராஜன், பொதுப்பணித்துறை நீர்ப்பாசன பிரிவு இளநிலை பொறியாளர் மதிவாணன், தானம் அறக்கட்டளை ஊழியர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் இது குறித்து மத்திய அரசின் துணை செயலர் ரவீந்தர் கூறியதாவது;-

மத்திய அரசின் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் மூலம் முதல்கட்டமாக கடந்த ஜூலை 1-ந்தேதி முதல் புதுச்சேரியில் உள்ள பாரம்பரிய நீர்நிலைகளை தூர்வாரும் பணிநேற்றுடன் (ஞாயிற்றுக் கிழமை) முடிவடைந்தது. இதில் குளங்கள் தூர்வாராமல் விடுபட்ட பணிகள் ஜல் சக்தி அபியான் திட்டம் பகுதி இரண்டாம் கட்டத்தின் போது முடிக்கப்படும். கிராமப் பகுதிகளில் நீர்வள ஆதாரங்களை பெருக்கி, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் உத்தேசிக்கப்படும் திட்டங்களுக்கு தேவைப்படும் நிதியை வழங்கிட மத்திய அரசு தயாராக உள்ளது. அதற்கான விரிவான திட்ட அறிக்கைகளை உரிய முறையில் தயாரித்து அனுப்பிட புதுச்சேரி மாநில அதிகாரிகளை அறிவுறுத்தி உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story