மாவட்ட செய்திகள்

பிரிட்டீஷ் விமான நிறுவனத்தில் வேலை பெற்று தருவதாக கூறி54 பேரிடம் ரூ.81 லட்சம் மோசடி; காதல் ஜோடிக்கு போலீஸ் வலைவீச்சு + "||" + Claiming to get a job at a British airline Rs. 81 lakh fraud on 54 persons

பிரிட்டீஷ் விமான நிறுவனத்தில் வேலை பெற்று தருவதாக கூறி54 பேரிடம் ரூ.81 லட்சம் மோசடி; காதல் ஜோடிக்கு போலீஸ் வலைவீச்சு

பிரிட்டீஷ் விமான நிறுவனத்தில் வேலை பெற்று தருவதாக கூறி54 பேரிடம் ரூ.81 லட்சம் மோசடி; காதல் ஜோடிக்கு போலீஸ் வலைவீச்சு
பிரிட்டீஷ் விமான நிறுவனத்தில் வேலை பெற்றுத்தருவதாக கூறி 54 பேரிடம் மொத்தம் ரூ.81 லட்சம் வசூலித்து மோசடி செய்த காதல் ஜோடியை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
மங்களூரு, 

பிரிட்டீஷ் விமான நிறுவனத்தில் வேலை பெற்றுத்தருவதாக கூறி 54 பேரிடம் மொத்தம் ரூ.81 லட்சம் வசூலித்து மோசடி செய்த காதல் ஜோடியை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

விமான நிறுவனத்தில் வேலை

உத்தர கன்னடா மாவட்டம் கார்வார் அருகே சிரவாடா பகுதியைச் சேர்ந்தவர் மார்வின். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார்வாரில் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கினார். இதையடுத்து இவர் தனது நண்பர்கள் மற்றும் தனக்கு பழக்கமானவர்கள் மூலம் தன்னுடைய தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமான நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக விளம்பரம் செய்தார். விமானி, விமான பணிப்பெண் உள்பட பல்வேறு வேலைவாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் அறிவித்தார்.

மேலும் அதற்காக 2 மாத பயிற்சி அளிக்க உள்ளதாகவும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி கட்டணமாக ஒவ்வொருவரும் தலா ரூ.1½ லட்சம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். இதுபற்றி அறிந்த உத்தர கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்த பலர் மார்வினின் வேலைவாய்ப்பு நிறுவனத்தில் தங்களுடைய பெயர்களை முன்பதிவு செய்தனர். மேலும் மார்வின் கூறியபடி தலா ரூ.1½ லட்சம் கட்டணத்தையும் செலுத்தினர். இவ்வாறாக உத்தர கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது ஹாசன், பெலகாவி, கோவா, உப்பள்ளி, பெங்களூரு ஆகிய ஊர்களில் இருந்தும் என மொத்தம் 54 பேர் பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமான நிறுவனத்தில் வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை மார்வினின் வேலைவாய்ப்பு நிறுவனத்தில் சேர்ந்தனர்.

பெங்களூருவில் பயிற்சி

அதையடுத்து பெங்களூருவில் பயிற்சி அளிப்பதாக கூறி அவர்கள் அனைவரையும் பெங்களூருவுக்கு மார்வின் அழைத்து வந்தார். பெங்களூருவில் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகமாக உள்ள பகுதிகளில் அவர்கள் 54 பேரையும் தங்க வைத்தார். மேலும் அங்கு ஒரு பெரிய அறையை வாடகைக்கு எடுத்து அவர்கள் அனைவருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக சாரா கான் என்பவர் வந்தார். அவர் தன்னை பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் உதவி மனித வள மேம்பாட்டு அதிகாரி என்று அறிமுகம் செய்து கொண்டார்.

அதை நம்பி அனைவரும் பயிற்சி பெற்றனர். அவர்களுக்கு உணவு, இருப்பிடம் மற்றும் அடையாள அட்டை, சீருடை உள்பட அனைத்தும் வழங்கப்பட்டது. கடைசி நாளில் மார்வினும் பெங்களூருவுக்கு சென்று அவர்கள் 54 பேரையும் சந்தித்தார். பின்னர் அவர்கள் 54 பேருக்கும் அவர்களின் விருப்பப்படி விமானி, விமான பணிப்பெண் உள்ளிட்ட பதவிகளில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

ரூ.81 லட்சம் மோசடி

பின்னர் ஓரிரு நாட்களில் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் உள்ள பிரிட்டீஷ் விமான நிறுவன அலுவலகத்திற்கு சென்று பணி நியமன ஆணைகளை கொடுத்து பணிக்கு சேர்ந்து கொள்ளும்படி கூறிவிட்டு மார்வினும், சாரா கானும் சென்றுவிட்டனர். அதை நம்பிய 54 பேரும் நேற்று முன்தினம் பெங்களூருவில் உள்ள விமான நிலையத்திற்கு சீருடையுடன் வந்தனர். அவர்கள் அங்கிருந்த அதிகாரிகளிடம் பணி நியமன ஆணைகளை கொடுத்து தாங்கள் பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமான நிறுவனத்தில் வேலைக்கு சேர வந்திருப்பதாக தெரிவித்தனர்.

இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போதுதான் அவர்கள் 54 பேரும் ஏமாந்து இருப்பது தெரியவந்தது. இதுபற்றி அவர்கள் பெங்களூரு மடிவாளா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போதுதான் மார்வினும், அவருடைய காதலியான அங்கீதா ராய்கரும் சேர்ந்து அவர்கள் 54 பேரையும் ஏமாற்றி ரூ.81 லட்சம் வரை வசூலித்து மோசடி செய்திருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.

காதல் ஜோடிக்கு வலைவீச்சு

இதில் அங்கீதா ராய்கர் தான் சாரா கான் என்ற பெயரில் பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் உதவி மனிதவள மேம்பாட்டு அதிகாரி என்று சொல்லி மோசடியில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து இச்சம்பவம் குறித்து கார்வார் டவுன் போலீசில் புகார் செய்யுமாறு பாதிக்கப்பட்ட 54 பேரிடமும் போலீசார் அறிவுறுத்தினர்.

அதன்பேரில் பாதிக்கப்பட்ட 54 பேரும் கார்வார் டவுன் போலீசில் நேற்று புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த நூதன மோசடியில் ஈடுபட்ட காதல் ஜோடியை வலைவீசி தேடி வருகிறார்கள்.