தென்இந்தியர்களுக்கு பிரச்சினைகளை திடமாக எடுத்துக்கூறும் குணம் குறைவு கவர்னர் வஜூபாய் வாலா பேச்சு


தென்இந்தியர்களுக்கு பிரச்சினைகளை திடமாக எடுத்துக்கூறும் குணம் குறைவு கவர்னர் வஜூபாய் வாலா பேச்சு
x
தினத்தந்தி 16 Sept 2019 4:00 AM IST (Updated: 16 Sept 2019 12:22 AM IST)
t-max-icont-min-icon

அறிவாளிகள், திறமையானவர்களாக இருந்தும் தென்இந்தியர்களுக்கு பிரச்சினைகளை திடமாக எடுத்துக்கூறும் குணம் குறைவு என்று கவர்னர் வஜூபாய் வாலா கூறினார்.

பெங்களூரு, 

அறிவாளிகள், திறமையானவர்களாக இருந்தும் தென்இந்தியர்களுக்கு பிரச்சினைகளை திடமாக எடுத்துக்கூறும் குணம் குறைவு என்று கவர்னர் வஜூபாய் வாலா கூறினார்.

பெங்களூருவில் நேற்று நடைபெற்ற கர்நாடக தொழில் வர்த்தக சபை நிறுவன நாள் விழாவில் கவர்னர் வஜூபாய் வாலா கலந்து கொண்டு பேசியதாவது:-

தப்பிக்கக்கூடாது

தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள், அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து வரி செலுத்துவதில் இருந்து தப்பிக்கக்கூடாது. வியாபாரிகள் நஷ்டம் அடைந்தால், நாட்டின் முதுகெலும்பு உடைந்தது போல் ஆகிவிடும். அதனால் தொழில் நிறுவனங்களுக்கு அனைத்து வகையான வசதி களையும் அரசு செய்து கொடுக்க வேண்டும்.

வாங்கிய கடனை குறித்த காலக்கெடுவுக்குள் திரும்ப செலுத்தாவிட்டால், அவர் களுக்கு கடன் கிடைப்பது இல்லை. கடனை திருப்பி செலுத்தும் காலத்தை அதிகரிக்குமாறு மத்திய அரசுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா அழுத்தம் கொடுக்க வேண்டும். மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், கர்நாடகத்தில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவரிடம் இதுபற்றி நீங்கள் (வணிகர்கள்) ஏன் கேள்வி கேட்பது இல்லை.

உறுதியுடன் கேளுங்கள்

நிர்மலா சீதாராமனிடம் இதுபற்றி எடியூரப்பா பேச வேண்டும். வியாபாரிகள் பேச பயப்படக்கூடாது. கனமான குரலில் உங்களின் பிரச்சினைகளை சம்பந்தப்பட்டவர்களிடம் தெரிவிக்க வேண்டும். நேர்மையான முறையில் தொழில் செய்யுங்கள். வரியை நேர்மையாக செலுத்துங்கள். உங்களின் பிரச்சினைகளை உறுதியுடன் கேளுங்கள்.

தென்இந்திய மக்கள் அறிவாளிகள், திறமையானவர்கள். ஆனால் பிரச்சினைகளை திடமாக எடுத்துக்கூறும் குணம் குறைவு. சரக்கு-சேவை வரி திட்டம் அமலுக்கு வந்த பிறகு அதிகாரிகளால் பணம் சம்பாதிக்க முடியவில்லை. அதனால் வணிகர்களுக்கு அதிகாரிகள் வேறு ரீதியில் தொல்லை கொடுக்கிறார்கள்.

புகார் தெரிவிக்கலாம்

வியாபாரம் தொடர்பான ரசீதுகள் பெயரில் வணிகர்களுக்கு அதிகாரிகள் தொல்லை கொடுப்பது குறித்து எனது கவனத்திற்கும் புகார்கள் வந்துள்ளன. இதற்கு வணிகர்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக முதல்-மந்திரியை சந்தித்து புகார் தெரிவிக்கலாம்.

அரசுகள், மக்களின் நலனுக்கான சட்டங்களை வகுத்து அமல்படுத்துகின்றன. இதை அதிகாரிகள் தவறாக பயன்படுத்தி, லாபம் சம்பாதிக்க அனுமதிக்கக்கூடாது. அதிகாரிகளின் ஆணவத்தை குறைக்க வேண்டும். வியாபாரம் மற்றும் வரி ஏய்ப்பு ஆகியவற்றில் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு கவர்னர் பேசினார்.

Next Story