தூத்துக்குடியில் பயங்கரம்: கப்பல் என்ஜினீயர்- நண்பர் சரமாரி வெட்டிக்கொலை 7 பேர் கும்பல் வெறிச்செயல்


தூத்துக்குடியில் பயங்கரம்: கப்பல் என்ஜினீயர்- நண்பர் சரமாரி வெட்டிக்கொலை 7 பேர் கும்பல் வெறிச்செயல்
x
தினத்தந்தி 16 Sept 2019 4:00 AM IST (Updated: 16 Sept 2019 1:09 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் கப்பல் என்ஜினீயர், அவருடைய நண்பரை மோட்டார் சைக்கிள்களில் வந்த 7 பேர் கும்பல் வெட்டிக் கொலை செய்தது. அந்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் கப்பல் என்ஜினீயர், அவருடைய நண்பரை மோட்டார் சைக்கிள்களில் வந்த 7 பேர் கும்பல் வெட்டிக் கொலை செய்தது. அந்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

என்ஜினீயர்

தூத்துக்குடி சிவந்தாகுளம் 2-வது தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 40), கப்பல் என்ஜினீயர். இவருடைய மனைவி இந்திரகுமாரி. இவர் டெல்லியில் உள்ள ஒரு நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த கோவில் கொடை விழாவுக்காக அவர் விடுமுறையில் ஊருக்கு வந்து உள்ளார்.

முருகேசன் கடந்த சில மாதங்களாக பணிக்கு செல்லாமல் இருந்து வந்தார். நேற்று மதியம் இவர் தெருவில் சென்று கொண்டிருந்தபோது, ஒரு வாலிபர் தனது மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றார். இதனை பார்த்த முருகேசன், அந்த நபரை பார்த்து, தெருவுக்குள் மெதுவாக செல்லுமாறு கூறி சத்தம் போட்டார். இதையடுத்து அந்த வாலிபர் அங்கிருந்து சென்று விட்டார்.

இரட்டைக்கொலை

நேற்று மாலையில் முருகேசன் சிவந்தாகுளம் மாரியம்மன் கோவில் அருகே நின்று கொண்டு இருந்தார். அவர், அங்கு வந்த ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் தனது நண்பரான பிரையண்ட்நகர் 9-வது தெருவை சேர்ந்த விவேக் (40) என்பவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிள்களில் 7 பேர் வந்தனர். அவர்கள் திடீரென முருகேசன், விவேக் ஆகியோரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர். பின்னர் அந்த 7 பேர் கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.

ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த 2 பேரையும் அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே முருகேசன் பரிதாபமாக இறந்தார். விவேக் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, சிறிது நேரத்தில் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இதை அறிந்த 2 பேரின் உறவினர்கள் ஆஸ்பத்திரியில் குவிந்தனர். அவர்கள் இறந்தவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதனர். இது காண்போரையும் கண்கலங்க செய்தது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன், நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ், தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலையாளிகளை பிடிப்பதற்காக போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தாளமுத்துநகர் பகுதியில் வாகன தணிக்கையின்போது ஒருவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடியில் நடந்த இரட்டை கொலை சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story