ஒருநாள், ஒரு பொழுதாவது எனக்காக விடியும்; தமிழக மக்களை தங்க தட்டில் வைத்து தாங்குவேன் - தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேச்சு


ஒருநாள், ஒரு பொழுதாவது எனக்காக விடியும்; தமிழக மக்களை தங்க தட்டில் வைத்து தாங்குவேன் - தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேச்சு
x
தினத்தந்தி 16 Sept 2019 5:15 AM IST (Updated: 16 Sept 2019 1:19 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் நடந்த முப்பெரும் விழாவில் பங்கேற்ற தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், ஒருநாள் ஒரு பொழுதாவது எனக்காக விடியும், அப்போது தமிழக மக்களை தங்க தட்டில் வைத்து தாங்குவேன் என்று பேசினார்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா, கட்சியின் 15-ம் ஆண்டு தொடக்க விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா திருப்பூர் காங்கேயம் ரோட்டில் உள்ள தனியார் ஓட்டல் வளாகத்தில் நடந்தது.

கூட்டத்துக்கு திருப்பூர் மாவட்ட செயலாளர் முத்து வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கி பேசினார். மத்திய பகுதி செயலாளர் பார்த்தீபன் வரவேற்றார்.

விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கி விஜயகாந்த் பேசியதாவது:-

உங்கள் அனைவருக்கும் வணக்கம். ஒரு நாள் ஒரு பொழுதாவது இந்த விஜயகாந்த்துக்காக விடியும். அப்போது தமிழக மக்களை தங்க தட்டில் வைத்து தாங்குவேன். அடுத்த முறை வரும்போது உங்களிடம் 1 மணி நேரம் பேசுவேன். இதுபோல் தமிழகம் முழுவதும் செல்வேன். இந்த விழாவில் பங்கேற்க வந்த உங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அனைவரும் பத்திரமாக வீட்டுக்கு செல்லுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அவருடைய மகன் விஜயபிரபாகரன், கட்சியின் அவைத்தலைவர் இளங்கோவன், கொள்கை பரப்பு செயலாளர் மோகன்ராஜ், துணை செயலாளர்கள் சுதீஷ், பார்த்தசாரதி, அக்பர், சந்திரா ஆகியோர் பேசினார்கள். இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கட்சியின் செயலாளர்கள், திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story