விவசாயிகளுக்கு ரூ.34 கோடி மானியம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்


விவசாயிகளுக்கு ரூ.34 கோடி மானியம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 16 Sept 2019 3:30 AM IST (Updated: 16 Sept 2019 1:38 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.34 கோடி மானியம் வழங்கப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.34 கோடி மானியம் வழங்கப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

வேளாண் எந்திரங்கள்

தமிழக அரசு விவசாய உற்பத்தியை இரண்டு மடங்காக உயர்த்திடவும், வருமானத்தை 3 மடங்காக உயர்த்திடவும் திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. விவசாயிகள் அதிக அளவில் மகசூல் பெற்று, வருமானம் ஈட்டும் வகையில் வேளாண் பொறியியல் துறை மூலம் மானியத்தில் பல்வேறு வேளாண் எந்திரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. வேளாண் பொறியியல் துறை மூலம் வேளாண்மை எந்திரமயமாக்கும் திட்டம், தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டம், நீடித்த மானாவாரி சாகுபடி இயக்கம், கடற்கரை வட்டாரங்களில் பண்ணைக்குட்டைகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில், வேளாண்மை எந்திரமயமாக்கும் திட்டத்தின் கீழ் பல்வேறு வேளாண் கருவிகள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. விவசாயிகள் மானிய விலையில் கருவிகள் மற்றும் எந்திரங்களை பெறுவதற்கு அரசால் உழவன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதில் தகுதியுள்ள விவசாயிகள் முன்பதிவு செய்து வேளாண் கருவிகள் மற்றும் எந்திரங்களை மானிய விலையில் பெறலாம். ரூ.5 லட்சம் மதிப்பிலான டிராக்டர், ரூ.5 லட்சம் மதிப்பிலான தானியங்கி நெல் நாற்று நடவு செய்யும் எந்திரம், ரூ.11 லட்சம் மதிப்பிலான அறுவடை எந்திரம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 40 சதவீதம் மானியத்திலும் வழங்கப்படுகிறது.

ரூ.34 கோடி மானியம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை வேளாண் பொறியியல் துறை மூலம் 143 விவசாயிகளுக்கு ரூ.1 கோடியே 57 லட்சம் மதிப்பிலான வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கப்பட்டு உள்ளன.

இதேபோன்று, தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 134 விவசாயிகளுக்கு ரூ.34 லட்சம் மதிப்பிலான வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளும், 86 விவசாயிகளுக்கு ரூ.2 கோடி மதிப்பில் சூரிய ஒளியால் இயங்கும் பம்புசெட்டுகளும், நீடித்த மானாவாரி தேசிய இயக்கத்தின் கீழ், ரூ.3 கோடியே 30 லட்சம் மதிப்பில் 79 தடுப்பணைகளும், கிராம அளவில் 45 இடங்களில் ரூ.3 கோடியே 60 லட்சம் மதிப்பில் வேளாண் கருவிகள் வாடகை மையங்களும், கடற்கரை வட்டாரங்களில் 299 இடங்களில் ரூ.2 கோடியே 79 லட்சம் மதிப்பில் பண்ணை குட்டைகளும் அமைக்கப்பட்டு உள்ளன. இதன்மூலம் விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.34 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Next Story