ஓமலூர் அருகே கொடியேற்று விழா: தமிழக வாழ்வுரிமை கட்சி பேனர் அகற்றம் - மாவட்ட செயலாளர் மீது வழக்கு


ஓமலூர் அருகே கொடியேற்று விழா: தமிழக வாழ்வுரிமை கட்சி பேனர் அகற்றம் - மாவட்ட செயலாளர் மீது வழக்கு
x
தினத்தந்தி 15 Sep 2019 10:30 PM GMT (Updated: 15 Sep 2019 9:29 PM GMT)

ஓமலூர் அருகே தமிழக வாழ்வுரிமை கட்சி கொடியேற்று விழாவையொட்டி வைக்கப்பட்ட பேனர் அகற்றப்பட்டது. இதுதொடர்பாக மாவட்ட செயலாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது பற்றிய விவரம் வருமாறு:-

ஓமலூர், 


சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காடையாம்பட்டி ஒன்றியம் சரக்கபிள்ளையூரில் தமிழக வாழ்வுரிமை கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது. இதற்காக சரக்கபிள்ளையூரில் ஊருக்குள் செல்லும் பாதை அருகே கொடிகம்பம் மற்றும் வரவேற்பு பேனர் வைக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் ரோட்டை மறித்து பேனர் வைக்கப்பட்டு இருப்பதாகவும், இது போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது, எனவே பேனரை அகற்ற வேண்டும், கொடி கம்பத்தை வேறு இடத்தில் வைக்கவேண்டும் என பொதுமக்கள், தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகளிடம் நேற்று காலை கூறினர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த தீவட்டிப்பட்டி போலீசார் இருதரப்பினரையும் சமரசம் செய்தனர். உடனடியாக பேனரை அகற்ற உத்தரவிட்டனர். மேலும் கொடியேற்றியவுடன் கொடிகம்பத்தை அகற்றிவிட்டு அனுமதி பெற்று வேறு இடத்தில் வைத்து கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்தனர். இதையடுத்து பேனர் அகற்றப்பட்டது.

இதன்பின்னர் தமிழக வாழ்வுரிமை கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். காடையாம்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் பழனி வரவேற்றார். மாநில அமைப்பு செயலாளர் சின்னதுரை, காடையாம்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் சேட்டு, ஒன்றிய தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில மகளிர் அணி அமைப்பாளர் முத்துலட்சுமி வீரப்பன் கொடியேற்றி வைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கினார். இதில் மாவட்ட இளைஞரணி தலைவர் தமிழரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதற்கிடையே பேனர் வைத்தது குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். அனுமதியின்றியும், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாகவும் பேனர் வைத்ததாக தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story