மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டித்தீர்த்த மழை


மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டித்தீர்த்த மழை
x
தினத்தந்தி 16 Sept 2019 3:30 AM IST (Updated: 16 Sept 2019 2:59 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்தது.

திண்டுக்கல்,

திண்டுக்கல்லில் நேற்று காலை வெயில் சுட்டெரித்தது. இந்தநிலையில் மதியம் வானில் கருமேகங்கள் சூழ்ந்தன. இதையடுத்து மாலை 5.45 மணியளவில் சாரல் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் இடி, மின்னலுடன் இரவில் பலத்த மழை கொட்டியது. இந்த மழை இரவு 8 மணி வரை நீடித்தது.

இதனால் திண்டுக்கல் ஏ.எம்.சி சாலை, மெயின்ரோடு உள்ளிட்ட சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே சாலையில் மழைநீர் முழங்கால் அளவுக்கு தேங்கி நின்றது. இதனால் சாலைகளில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

பழனியில் நேற்று காலை கடும் வெயில் அடித்தது. இந்நிலையில் மாலையில் மேகக்கூட்டங்கள் திரண்டன. அதைத்தொடர்ந்து இரவு 8 மணி அளவில் லேசான சாரல் மழை பெய்தது. அவ்வப்போது விட்டு விட்டு பெய்த இந்த திடீர் சாரல் மழையால் பழனியில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

கொடைரோடு பகுதியில் நேற்று மாலை 5 மணியில் இருந்து 6 மணி வரை மழை கொட்டித்தீர்த்தது. வேடசந்தூர் பகுதியில் நேற்று மாலை 4 மணியில் இருந்து 5 மணி வரை ஒரு மணி நேரம் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. நத்தத்தில் நேற்று மாலை 6.45 மணி முதல் இரவு 7.45 மணி வரை ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. வத்தலக்குண்டு பகுதியில் இரவு 7 மணி முதல் 9 மணிவரை சாரல் மழை பெய்தது. இதுபோல திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு மழை கொட்டித்தீர்த்தது.

Next Story