ஆண்டிப்பட்டி ரெயில்வே பாலத்தில் குளம்போல் தேங்கிய மழைநீர் - வாகன ஓட்டிகள் அவதி
ஆண்டிப்பட்டி ரெயில்வே பாலத்தில் குளம்போல் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர்.
ஆண்டிப்பட்டிம்,
ஆண்டிப்பட்டியில் மதுரை-போடி அகல ரெயில்பாதை திட்டத்தில் 3 இடங்களில் பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பாலத்தின் மேல் ரெயில்பாதையும், பாலத்தின் அடியில் வாகனங்கள் செல்லும் வகையில் சாலை உள்ளது. ஆண்டிப்பட்டியில் இருந்து ஏத்தகோவில், மேக்கிழார்பட்டி செல்லும் சாலையில் அமைக்கப்பட்டுள்ள பாலங்களின் வழியாக ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது.
இந்நிலையில் ஆண்டிப்பட்டி பகுதியில் நேற்று பெய்த மழையின் காரணமாக ரெயில்வே பாலங்களில் குளம் போல தண்ணீர் தேங்கியுள்ளது. அதில் ஆண்டிப்பட்டி-ஏத்தகோவில் சாலையில் அமைக்கப்பட்டுள்ள ரெயில்வே பாலத்தில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் தண்ணீரை கடந்து செல்லும்போது அவை பழுதாகி வருகிறது. இதேபோல் ஆண்டிப்பட்டி-மேக்கிழார்பட்டி சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. அந்த சாலையில் ரெயில்வே பாலத்தில் அதிகமான தண்ணீர் தேங்கியுள்ளதால், அதன் வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இந்த பாலத்தில் தேங்கியுள்ள மழைநீரில் சிறுவர்கள் குதித்து விளையாடி வருகின்றனர்.
ரெயில்வே பாலங்களில் தேங்கும் தண்ணீரை வெளியேற்ற கட்டமைப்பு வசதிகளை சரிவர செய்யவில்லை என்று பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
இந்த சாலைகளில் ரெயில்வே பாலத்தில் இனிவரும் நாட்களில் மழைநீர் தேங்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story