செப்டாங்குளம் கிராமத்தில், பெரிய ஏரிக்கரை உடைந்து குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்தது - விவசாய நிலங்கள் மூழ்கின


செப்டாங்குளம் கிராமத்தில், பெரிய ஏரிக்கரை உடைந்து குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்தது - விவசாய நிலங்கள் மூழ்கின
x
தினத்தந்தி 16 Sept 2019 3:45 AM IST (Updated: 16 Sept 2019 3:00 AM IST)
t-max-icont-min-icon

செப்டாங்குளம் கிராமத்தில் பெரிய ஏரிக்கரை உடைந்து குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் விவசாய நிலங்கள் மூழ்கின.

சேத்துப்பட்டு, 

பெரணமல்லூரை அடுத்த செப்டாங்குளம் கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையின் காரணமாக வறண்டு கிடந்த ஏரியில் தண்ணீர் தேங்கி இருந்தது. இதில் குடிமராமத்து திட்டத்தின் மூலம் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.29 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகள் நடந்து வந்தது.

அதன்படி இந்த ஏரியில் கரை பலப்படுத்துதல், மதகு கட்டுதல் பணிகள் நடந்து வந்தது. இந்த நிலையில் சுமார் 14 நாட்களாக இந்த ஏரியில் குடிமராமத்து பணி நடைபெறாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வந்தவாசி தாலுகா பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் பெரிய ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது.

அதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் பெரிய ஏரியின் ஒரு பகுதியில் கரை பலமிழந்து மண் சரிந்து தண்ணீர் வெளியேறியது. இதனால் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் அருகில் இருந்த விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கின.

இதில் ஏழுமலை என்பவருக்கு சொந்தமான ஆட்டுப்பண்ணை, கோழிப்பண்ணைக்குள் தண்ணீர் புகுந்ததால் கோழிகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. மேலும் தகவல் அறிந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள், வந்தவாசி தாசில்தார், வருவாய் அலுவலர்கள் பார்வையிட்டு பொக்லைன் எந்திரம் மூலம் கரையை பலப்படுத்தினர்.

பெரிய ஏரியில் வெளியேறிய தண்ணீர் தாடிநொளம்பை கிராமத்தில் உள்ள ஏரிக்கு சென்றுவிட்டது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்தனர்.

Next Story