ஜவ்வாதுமலை பகுதிகளில் 1 லட்சம் விதைப்பந்துகள் வீசும் பணி - கலெக்டர் தொடங்கி வைத்தார்


ஜவ்வாதுமலை பகுதிகளில் 1 லட்சம் விதைப்பந்துகள் வீசும் பணி - கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 16 Sept 2019 4:00 AM IST (Updated: 16 Sept 2019 3:00 AM IST)
t-max-icont-min-icon

ஜல்சக்தி அபியான் நீர் மேலாண்மை இயக்கத்தின் கீழ் ஜவ்வாதுமலை பகுதிகளில் 1 லட்சம் விதைப்பந்துகள் வீசும் பணியை கலெக்டர் கந்தசாமி தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை,

ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜவ்வாதுமலை அடிவாரம் ரேணுகாம்பாள் கோவில் அருகில் ஜல்சக்தி அபியான் நீர் மேலாண்மை இயக்கத்தின் கீழ் ஜவ்வாதுமலை பகுதிகளில் முதல் முறையாக 1 லட்சம் விதைப்பந்துகள் வீசும் பணியை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் வனத்துறை, பள்ளிக் கல்வித்துறை, நெடுஞ்சாலைத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வருவாய்த்துறை, போளூர் பேரூராட்சி ஆகியவற்றை சேர்ந்த துறை அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனம், தன்னார்வலர்கள் மற்றும் போளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சாணார்ப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உள்பட 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு விதைப் பந்துகளை வீசினர்.

அப்போது கலெக்டர் கூறியதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலத்தடி நீர் அதிகரிக்கவும், மழைநீர் சேகரிக்கவும், ஏரிகள், குளங்கள், குட்டைகள் தூர்வாரி நீர்நிலைகளில் அதிகப்படியான தண்ணீர் சேமிக்கவும் ஜல்சக்தி அபியான் நீர் மேலாண்மை இயக்கத்தின் கீழ் பல்வேறு பணிகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வீடுகளில் சமையலறை, குளியலறையில் பயன்படுத்தும் தண்ணீரை நாம் வீணாக்காமல் தோட்டத்தில் விட வேண்டும். மழைநீர் சேகரிப்பதற்கு ஊரக வளர்ச்சித்துறை உள்பட பல்வேறு துறைகள் மூலமாக தொடர்ந்து திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதன் ஒரு அங்கமாக மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது.

மழை நிரந்தரமாக பொழிவதில்லை, மழைநீரை சேமித்து இயற்கை வளத்தை நாம் பாதுகாக்க வேண்டும். வீடுகளில் பெய்யும் மழைநீரை சேமித்தால், வருடம் முழுவதும் சேமிக்கும் தண்ணீர் நமக்கு பயன் தரும். மலைப் பகுதிகளில் அனைத்து இடங்களிலும் மரம் நடுவது கடினம், அதற்காக தான் விதைப்பந்து வீசப்படுகிறது. இதன் மூலம் ஏற்கனவே காடுகளில் இருக்கும் மரங்களின் எண்ணிக்கை உயர்ந்து காடு மேலும் அடர்த்தியாகும். இதனால் மரங்கள் மழை தரும், நிழல் தரும் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும். கடந்த ஒரு மாதமாக விதைப் பந்துகளை தயாரித்துள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கலெக்டர் போளூர் பேரூராட்சி சார்பாக ஜல்சக்தி அபியான் நீர் மேலாண்மை இயக்கத்தின் விழிப்புணர்வு பிரசார வாகனத்தை பார்வையிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

Next Story