பயங்கரவாதிகளுடன் வாட்ஸ்-அப்பில் தொடர்பா? கோவையில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரணை
பயங்கரவாதிகளுடன் வாட்ஸ்-அப் மூலம் தொடர்பு கொண்டார்களா? என்ற சந்தேகத்தின் பேரில் கோவையில் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த 3 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
கோவை,
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது தாக்குதல் நடத்த பாகிஸ்தான், இலங்கையை சேர்ந்த பயங்கரவாதிகள் 6 பேர் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து இருந்தது.
இந்த பயங்கரவாதிகள் கோவையில் பதுங்கி இருந்து தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து கோவையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. பயங்கரவாதிகள் யாரும் பிடிபடாததால் ஒரு வாரத்துக்கு பிறகு இயல்பு நிலை திரும்பியது.
ஆனாலும் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் யாரேனும் தொடர்பு வைத்து உள்ளார்களா? என கோவை நகர போலீசார் கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் கோவை இடையர் வீதியில் உள்ள செல்போன் கடைக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர் தனது செல்போனை பழுதுபார்க்க கொடுத்தார். அதன்பிறகு செல்போனை வாங்க அந்த வாலிபர் வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த செல்போன் கடைக்காரர் அதனை ஆய்வு செய்தபோது அதில் இருந்த வாட்ஸ்-அப் குரூப்பில் பல்வேறு தகவல்கள் பரிமாறப்பட்டு இருப்பது தெரியவந்தது. மதவிரோத வாசகங்களும் இடம்பெற்று இருந்தன.
இதனால் அதிர்ச்சி அடைந்த செல்போன் கடை உரிமையாளர் இது குறித்து மாநகர போலீசில் புகார் செய்தார். உடனே போலீசார் அந்த செல்போனை வாங்கி ஆய்வு செய்தபோது அதன் உரிமையாளர் கோவை இடையர் வீதியில் வசித்து வரும் பாரூக் கவுசீர் (வயது25) என்பது தெரியவந்தது.
மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த இவர் கோவையில் தங்கி நகை பட்டறையில் வேலை செய்து வந்துள்ளார். இவர், முஜாகிதின் என்ற வாட்ஸ்அப் குழுவில் இணைந்து செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவர், பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தகவல்களை பரிமாறினாரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது.
அவர் அளித்த தகவலின்படி அவருடன் தங்கி இருந்த மேலும் 2 மேற்கு வங்காள வாலிபர்களை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர்களது செல்போனில் பல்வேறு படங்கள் இருந்தாலும், பயங்கரவாதிகளுடன் தொடர்பு குறித்து உறுதி செய்யப்படவில்லை. இதைத்தொடர்ந்து மேற்கு வங்காள வாலிபர்கள் 3 பேரும் விடுவிக்கப்பட்டனர். எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு வரவேண்டும் என்ற நிபந்தனையுடன் அவர்களை போலீசார் அனுப்பி வைத்தனர்.
கோவை சுக்கிரவார் பேட்டையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பவன்சிங் என்பவர் அறையில் இருந்து 2 கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள அவரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு என்ற சந்தேகத்தில் 3 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story