கூடலூர் அருகே, பழுதான பயணிகள் நிழற்குடை சீரமைக்கப்படுமா? மாணவ-மாணவிகள் எதிர்பார்ப்பு


கூடலூர் அருகே, பழுதான பயணிகள் நிழற்குடை சீரமைக்கப்படுமா? மாணவ-மாணவிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 15 Sep 2019 10:15 PM GMT (Updated: 15 Sep 2019 9:30 PM GMT)

கூடலூர் அருகே பழுதான பயணிகள் நிழற்குடை சீரமைக்கப்படுமா? என்று மாணவ-மாணவிகள் எதிர்பார்க்கின்றனர்.

பந்தலூர்,

கூடலூர் அருகே உள்ளது செம்பாலா. இங்கு ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. ஆனால் தொடர்ந்து முறையாக பராமரிக்கப்படவில்லை. இதனால் அந்த நிழற்குடை நாளடைவில் பழுதடைந்து விட்டது. மேற்கூரையில் பாசி படர்ந்து, செடிகள் முளைக்க தொடங்கி விட்டன. மேலும் நிழற்குடையை சுற்றிலும் புதர் செடிகள் அடர்ந்து வளர ஆரம்பித்தன. இதனால் வி‌‌ஷ ஜந்துகளின் நடமாட்டம் அதிகரிக்க தொடங்கியது. மேலும் இரவு நேரங்களில் சமூக விரோத கும்பல் மது அருந்தும் கூடாரமாக, அதனை பயன்படுத்துகின்றனர். மறுநாள் காலையில் பஸ் நிறுத்தத்துக்கு வரும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நிழற்குடைக்குள் காலி மதுபாட்டில்கள் கிடப்பதை கண்டு முகம் சுளிக்கின்றனர்.

மேலும் நிழற்குடை பழுதடைந்து கிடப்பதால், இடிந்து விழுந்து விடுமோ? என்ற பீதியில் அதனுள் செல்லவே பயப்படுகின்றனர். எனவே அந்த நிழற்குடையை சீரமைத்து, முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து செம்பாலா பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் கூறியதாவது:-

தினமும் காலையில் பள்ளிக்கு செல்லும் போதும், பள்ளி முடிந்து மாலையில் வீடு திரும்பும் போதும் அந்த பஸ் நிறுத்தத்தையே பயன்படுத்துகிறோம்.

ஆனால் அங்குள்ள நிழற்குடைக்குள் செல்வது இல்லை. வெளியிலேயே நின்றுவிடுகிறோம். காரணம், அது பழுதடைந்து கிடப்பதே ஆகும். இதனால் மழை, வெயிலில் அவதிப்பட்டு வருகிறோம். மேலும் பாம்பு உள்ளிட்ட வி‌‌ஷ ஜந்துகளும் நடமாடுகின்றன. இதனால் அதனருகில் நிற்க கூட பயமாக இருக்கிறது. சில நேரங்களில் அந்த நிழற்குடையில் இரவில் அமர்ந்து மது குடிப்பவர்கள், காலையிலும் போதையிலேயே படுத்து கிடக்கின்றனர். மேலும் கால்நடைகளும் இளைப்பாறுகின்றன. இதனால் அங்கு சுகாதாரம் கேள்விக்குறியாகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, பழுதான அந்த நிழற்குடையை சீரமைக்க முன்வர வேண்டும். மேலும் போதை ஆசாமிகள் மற்றும் கால்நடைகளின் இருப்பிடமாக அது மாறுவதை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story