நில ஆசை காட்டி உதயன்ராஜே போஸ்லேவை பா.ஜனதா இழுத்து கொண்டது தேசியவாத காங்கிரஸ் குற்றச்சாட்டு
நில ஆசை காட்டி உதயன்ராஜே போஸ்லேவை பா.ஜனதா இழுத்து கொண்டது என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் குற்றம்சாட்டியுள்ளார்.
மும்பை,
நில ஆசை காட்டி உதயன்ராஜே போஸ்லேவை பா.ஜனதா இழுத்து கொண்டது என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் குற்றம்சாட்டியுள்ளார்.
சிவாஜியின் வழித்தோன்றல்
மராட்டிய சட்டசபை தேர்தல்தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலை முன்னிட்டு அரசியல் ஆதாயம் கருதி எதிர்க்கட்சிகளான காங்கிரஸ்,தேசியவாதகாங்கிரஸ் தலைவர்கள் ஆளும் பா.ஜனதா,சிவசேனாவுக்கு தாவிவருகின்றனர்.
இந்தநிலையில் தேசியவாத காங்கிரஸ் எம்.பி.யான உதயன்ராஜே போஸ்லே நேற்று முன்தினம் டெல்லியில் நடந்த விழாவில் பா.ஜனதா தேசிய தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
முன்னதாக உதயன்ராஜே போஸ்லே தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இவர் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் வழித்தோன்றல் ஆவார். இவரது கட்சி தாவல் தேசியவாத காங்கிரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
போராட்டம் நடத்தும்
அசர கும்பங்களை சேர்ந்தவர்களை கட்சியில் இணைக்க பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுத்து வருவதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
தற்போதைய சட்டங்களின்படி, முந்தைய மன்னராட்சியின்போது பயன்படுத்திய நிலங்களை சம்பந்தப்பட்ட அரச குடும்பங்களால் விற்கவோ, அடமானம் வைக்கவோ அல்லது பயன்படுத்தவோ முடியாது.
இந்த நிலங்களை விற்க அனுமதி அளிப்பதாக கூறி பா.ஜனதா அரச கும்பங்களை சேர்ந்தவர்களை தங்கள் கட்சிக்கு இழுத்து வருகிறது. அத்தகைய எந்தவொரு முடிவையும் நாங்கள் எதிர்ப்போம்.
உதயன்ராஜே போஸ்லே இந்த அனுமதிக்காக பா.ஜனதா பக்கம் சாய்ந்திருக்கலாம். ஆனாலும் இப்படிப்பட்ட முடிவு ஏதேனும் எடுக்கப்பட்டால் அதை எதிர்த்து எங்கள் கட்சி போராட்டம் நடத்தும்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உதயன்ராஜே போஸ்லேவுக்கு பலமுறை வாய்ப்பு அளித்தார். இருந்தும் அவர் கட்சியில் இருந்து விலகிவிட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story