சட்டசபை தேர்தலையொட்டி சரத்பவார் நாளை முதல் சுற்றுப்பயணம்


சட்டசபை தேர்தலையொட்டி சரத்பவார் நாளை முதல் சுற்றுப்பயணம்
x
தினத்தந்தி 16 Sept 2019 4:25 AM IST (Updated: 16 Sept 2019 4:25 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய சட்டசபை தேர்தலையொட்டி தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நாளை முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

மும்பை, 

மராட்டிய சட்டசபை தேர்தலையொட்டி தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நாளை முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

கட்சி தாவல்

மராட்டிய சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரசை சேர்ந்த முக்கிய தலைவர்கள் ஆளும் பா.ஜனதா, சிவசேனா கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.

குறிப்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்கள் அதிக அளவில் கட்சி தாவலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் பாஸ்கர் ஜாதவ் சிவசேனாவில் இணைந்தார்.

இதேபோல் நேற்று முன்தினம் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சத்தாரா தொகுதி எம்.பி.யுமான உதயன்ராஜே போஸ்லே டெல்லியில் மத்திய மந்திரி அமித்ஷா முன்னிலையில் பா.ஜனதாவில் இணைந்தார்.

மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் வழித்தோன்றலாக கருதப்படும் இவர் கட்சி தாவி இருப்பது தேசியவாத காங்கிரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

சுற்றுப்பயணம்

இந்த நிலையில் கட்சியினருக்கு மீண்டும் புத்துணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் நாளை (செவ்வாய்கிழமை) முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக கட்சியின் டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில், “ தற்போதுள்ள சூழ்நிலையில் கட்சியின் தலைவர் சரத்பவாரின் சுற்றுப்பயணம் முக்கியமானதாக இருக்கும். சில முக்கிய தலைவர்கள் வெளியேறியபோதும் கட்சிக்கு விசுவாசமாக இருக்கும் அடிமட்ட தொண்டர்களுக்கு இவரது தொடர்பு மன உறுதியை அதிகரிக்கும். முதல் கட்டமாக அவர் சோலாப்பூர், உஸ்மானாபாத், பீட், லாத்தூர், ஹிங்கோலி, பர்பானி, ஜல்னா, அவுரங்காபாத், அகமதுநகர் மற்றும் சத்தாரா ஆகிய 10 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மாநிலத்தில் 80 பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story