கொள்ளிடம் ஆற்றில் உடைப்பை சரி செய்ய 5 டன் சவுக்கு மரக்கட்டைகள் தயார் - அதிகாரிகள் நடவடிக்கை
கொள்ளிடம் ஆற்றில் உடைப்பை சரி செய்ய 5 டன் சவுக்கு மரக்கட்டைகளை அதிகாரிகள் தயார் நிலையில் வைத்துள்ளனர்.
கொள்ளிடம்,
கர்நாடக மாநிலம் குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு, தமிழகத்தில் கொள்ளிடம், வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு, புதுஆறு, திருமலைராஜனாறு, ஓடம்போக்கி, பாண்டவையாறு உள்ளிட்ட கிளை ஆறுகளாக பிரிந்து விவசாய பாசனத்துக்கு உதவி வருகிறது.
இதில் கொள்ளிடம் ஆறு காவிரி ஆறு பெருக்கெடுக்கும்போது அதன் வேகத்தை கட்டுப்படுத்தும் வடிகாலாக பெரும் பங்கு வகிக்கிறது. காவிரி ஆற்றில் வரும் உபரியான நீர் முழுவதும் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டு, கடலில் கலக்கிறது. இதனால் வெள்ள அபாயம் கட்டுப்படுத்தப்படுகிறது. எனவே கொள்ளிடம் ஆறு டெல்டாவின் முக்கிய ஆறாக திகழ்கிறது.
நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள பழையாறு பகுதியில் கொள்ளிடம் ஆறு கடலில் கலக்கிறது. வடகிழக்கு பருவமழை காலத்தில் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுப்பணித்துறை
அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
இதன் ஒரு பகுதியாக ஆற்றின் கரைகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரைகள் உடையும் அபாயநிலை ஏற்பட்டாலோ, கொள்ளிடம் பகுதியில் உள்ள பிரதான பாசன மற்றும் வடிகால் வாய்க்கால்களில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலோ அதனை உடனடியாக அடைத்து சரி செய்ய வசதியாக 5 டன் சவுக்கு மரக்கட்டைகள், 5 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் மணல் மூட்டைகளை தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
Related Tags :
Next Story