தனியார் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு அதிகாரிகள் நெருக்கடி - கலெக்டரிடம் புகார்
அரசு அதிகாரிகள் நெருக்கடி கொடுப்பதாக கலெக்டரிடம் தனியார் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் புகார் அளித்தனர்.
தேனி,
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். கூட்டத்தில், 782 மனுக்கள் பெறப்பட்டன. மாவட்டம் முழுவதும் வீடு இல்லாத 136 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாக்களை கலெக்டர் வழங்கினார். மேலும், போடி அருகே முதுவாக்குடி மலை கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவருக்கு வன உரிமைச் சான்றை கலெக்டர் வழங்கினார்.
கூட்டத்தில் மனு அளிக்க தமிழ்நாடு கேபிள் டி.வி. சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் தமிழன், மாவட்ட செயலாளர் ஆண்டவர் மற்றும் நிர்வாகிகள், ஆபரேட்டர்கள் பலர் வந்தனர். அவர்கள் கலெக்டரிடம், கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு அரசு அதிகாரிகள் நெருக்கடி கொடுப்பதாக கூறி புகார் அளித்தனர்.
புகார் அளித்த நிர்வாகிகள் கூறுகையில், ‘தனியார் கேபிள் டி.வி. நிறுவன ஆபரேட்டர்களுக்கு அரசு கேபிள் டி.வி. நிறுவன அதிகாரிகள் பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகின்றனர். அரசு கேபிள் டி.வி. மட்டுமே செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தனியார் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களை முடக்கும் வகையில் அரசின் செயல்பாடு உள்ளது. தனியார் கேபிள் டி.வி. இணைப்புகளை அதிகாரிகள் பல இடங்களில் துண்டித்து வருகின்றனர்.
இதுகுறித்து அரசு சுமுக தீர்வு காண வேண்டும்’ என்றனர்.
Related Tags :
Next Story