ஊட்டி நகராட்சியில், பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்யும் எந்திரங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன


ஊட்டி நகராட்சியில், பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்யும் எந்திரங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன
x
தினத்தந்தி 16 Sep 2019 10:30 PM GMT (Updated: 16 Sep 2019 4:03 PM GMT)

ஊட்டி நகராட்சியில் பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்யும் எந்திரங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழல் மற்றும் வனப்பகுதிகளை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதனை தீவிரமாக்க மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி முதல் நீலகிரியில் நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், வணிக வளாகங்களில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருளில் அடைக்கப்பட்டு உள்ள குளிர்பானங்கள் மற்றும் உணவுபொருட்களை விற்க அல்லது பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு அமலில் உள்ளது.

அதற்கு மாற்று ஏற்பாடாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் 70 குடிநீர் ஏ.டி.எம்.கள் அமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. அதனை தொடர்ந்து பிளாஸ்டிக் பாட்டில்களை முற்றிலும் ஒழிக்க ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, புளுமவுண்டன், மத்திய பஸ் நிலையம் உள்பட 5 இடங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்யும் எந்திரங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த எந்திரங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கலந்துகொண்டு ஒரு எந்திரத்தை திறந்து வைத்தார்.

அந்த எந்திரத்தில் போடப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் நொறுங்கி விடும். அதனை மறுசுழற்சிக்கு பயன்படுத்தலாம். பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்பாட்டை தவிர்க்கவும், நீலகிரியின் பசுமையை பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறியதாவது:-

ஊட்டி நகராட்சியில் பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்யும் 5 எந்திரங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. சுற்றுலா பயணிகள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பொதுமக்கள் கீழே கிடக்கும் பாட்டில்களை எடுத்து எந்திரங்களில் போடலாம். அதில் நொறுக்கப்படும் பிளாஸ்டிக்குகள் மறுசுழற்சிக்கு பயன்படுத்தப்படும். அந்த எந்திரத்தில் ஒரு பாட்டிலை போட்டு செல்போன் எண்ணை பதிவு செய்தால், பே-டிஎம் செயலி கணக்கில் ரூ.5 ஆன்லைன் மூலம் செலுத்தப்படும்.

இந்த எந்திரங்களில் உள்ள பிளாஸ்டிக்குகள் சேகரிக்கப்படுவதோடு, பராமரிப்பு பணிகளை தனியார் அமைப்பு மேற்கொள்ளும். 2-வது சீசனையொட்டி ஊட்டிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு வர வேண்டாம். குடிநீர் ஏ.டி.எம்.களை பயன்படுத்துவதோடு, குப்பைகளை வெளியில் வீசாமல் நீலகிரி மாவட்டத்தின் இயற்கை அழகை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின் படி 1.1.2020-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் நடைபெற உள்ளது. அதன் முன் சுருக்க திருத்த பணியாக கடந்த 1-ந் தேதி முதல் வருகிற 30-ந் தேதி வரை வாக்காளர் சரிபார்ப்பு திட்ட பணிகள் நடந்து வருகிறது.

குடிமக்கள் தங்களது விவரங்களை வாக்காளர் மாவட்ட தொடர்பு மைய கட்டணமில்லா தொலைபேசி எண்- 1950, தேசிய வாக்காளர் சேவை திட்ட இணையதளம், பொது சேவை மையங்கள் மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம்.

மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் தொடர்பான விண்ணப்ப படிவங்களை அளித்து பயன்பெறலாம் என்று துண்டு பிரசுரம் வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story