குன்னூரில், ரெயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


குன்னூரில், ரெயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 Sep 2019 10:30 PM GMT (Updated: 16 Sep 2019 4:12 PM GMT)

குன்னூரில் ரெயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குன்னூர்,

குன்னூரில் ரெயில் நிலையம் உள்ளது. இதனருகில் பணிமனை உள்ளது. இதன் முன்பு எஸ்.எம்.ஆர்.யூ. தொழிற்சங்கம் சார்பில் ரெயில்வே துறையை தனியார்மயமாக்கும் முயற்சியை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு குன்னூர் கிளை பொதுச்செயலாளர் சாகுல் அமீது தலைமை தாங்கினார். தலைவர் ஜான் சேவியர், துணைத்தலைவர் சண்முக நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ரெயில்வே துறையை தனியார்மயமாக்கக்கூடாது, புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தொழிற்சங்கத்தினர் திரளாக கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டம் குறித்து எஸ்.எம்.ஆர்.யூ. தொழிற்சங்கத்தினர் கூறிய தாவது:-

இந்திய ரெயில்வே துறை லாபகரமாக இயங்கி வருகிறது. இருப்பினும் மத்திய அரசு தனியார்மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. மதுரையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் ‘ஸ்டேஜ் எக்ஸ்பிரஸ் ரெயில்‘ ரெயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேசனுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு படிப்படியாக ரெயில்களை தனியாருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

தற்போது ரெயில் டிக்கெட் கட்டணத்தில் 1 ரூபாய்க்கு 47 பைசா மானியம் வழங்கப்படுகிறது. 53 பைசா மட்டுமே பொதுமக்கள் கட்டணமாக உள்ளது. ரெயில்வே துறையை தனியார்மயமாக்கினால் டிக்கெட் விலை உயரும். இதன் மூலம் ரெயில் பயணம் என்பது ஏழை, நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனியாகிவிடும். எனவே ரெயில்வே துறையை தனியார்மயமாக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். கடந்த 2004-ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு புதிய பென்சன் திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. அவர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்படும் தொகை, பங்கு சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. தற்போது பங்கு சந்தை வீழ்ச்சியடைந்து வருகிறது. இதனால் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்குமா? என்ற அச்சம் உள்ளது. எனவே புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story