கோவையில் குறைதீர்க்கும் கூட்டம்: அனுமதி இல்லாத கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் - மக்கள் பாதை அமைப்பினர் மனு
கோவை மாவட்டத்தில் அனுமதி இல்லாத கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என்று மக்கள் பாதை அமைப்பினர் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தனர்.
கோவை,
கோவை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் ராஜாமணி தலைமை தாங்கினார். இதில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, ரேஷன் கார்டு, நடைபாதை வசதி, வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கோவை மக்கள் பாதை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாபு மற்றும் நிர்வாகிகள் மனு ஒன்று அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:- கோவை மாவட்டத்தில் கடந்த பல ஆண்டுகளாக விதிமுறைகளை மீறி விளம்பர பேனர்கள் வைக்கப்படுகின்றன.
சென்னையில் பேனர் விழுந்ததில் பெண் ஒருவர் இறந்ததை தொடர்ந்து கோவை உள்பட மாநிலம் முழுவதும் பேனர்கள் அகற்றப்பட்டன. ஆனால் கோவையில் முக்கிய சாலை சந்திப்புகளில் பேனர் வைப்பதற்கான இரும்பு கம்பிகள் அகற்றப்படாமல் அப்படியே உள்ளன.
குறிப்பாக வடவள்ளி மற்றும் பயணியர் மாளிகை சாலைகளில் பேனர் வைப்பதற்கான இரும்பு கம்பிகள் அதிகமாக காணப்படுகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், விபத்துகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதேபோல் நகரில் பல இடங்களில் அனுமதியின்றி கொடிக்கம்பங்கள் நிறுவப்பட்டு உள்ளன. இதனை விரைந்து அகற்ற வேண்டும். அரசு சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டப்படுவதை தடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் கோவை மண்டல செயலாளர் வகாப் என்கிற தமிழ்செல்வன் மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
கோவை மலைப்பகுதிகள் பாதுகாப்பு சட்டத்தால் அறிவிக்கப்பட்ட 17 கிராமங்களில் சோமையம்பாளையம் ஊராட்சி, நஞ்சுண்டாபுரம் ஊராட்சி, சின்னத்தடாகம் ஊராட்சி, நெ.24 வீரபாண்டி ஊராட்சி ஆகியவை வருகின்றன. இப்பகுதிகள் செழிப்பான செம்மண் பூமியாக இருந்தமையால் சோளம் உள்ளிட்ட நவ தானியங்களும் விளைந்த பூமியாக ஒரு காலத்தில் விளங்கியது.
தற்போது இந்த பகுதியில் அரசின் அனுமதி இன்றி ஏராளமான செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. இதற்காக இந்த பகுதியில் 50 அடி முதல் 80 அடி வரை பள்ளம் தோண்டி செம்மண் எடுக்கப்படுகிறது. இந்த பள்ளங்களால் காட்டு யானைகள் வழித்தடம் பாதிக்கப்படுகிறது. மேலும் இந்த பகுதியில் மர்மமான முறையில் காட்டு யானைகள் இறக்கின்றன. இங்கு ஏற்படும் மாசுவினால் பொதுமக்களுக்கு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அனுமதியின்றி இயங்கும் செங்கல் சூளைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
தலித் மக்கள் விடுதலை கழகம் மாவட்ட செயலாளர் இரணியன் அளித்துள்ள மனுவில், டாஸ்மாக் ஊழியர்கள் அடிக்கடி தாக்கப்பட்டு டாஸ்மாக் பணம் கொள்ளையடிக்கப்படும் சம்பவம் நடக்கிறது. எனவே ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதுடன், டாஸ்மாக் கடைகளுக்கு அரசு அதிகாரிகள் நேரிடையாக சென்று பணத்தை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டு இருந்தது.
ஆனைமலை மகாத்மா காந்தி ஆசிரம நிர்வாகிகள் அளித்த மனுவில், காந்தி பிறந்தநாளான அக்டோபர் மாதம் 2-ந் தேதியை உலக அகிம்சை தினமாக ஐ.நா. அறிவித்து உள்ளது. உலகம் முழுவதும் தற்போது வன்முறைகள் அதிகரித்து உள்ள நிலையில் மாணவ-மாணவிகளுக்கு காந்தியின் அகிம்சை குறித்து எடுத்து கூற வேண்டும். ஆனால் காந்தி ஜெயந்தி அன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது.
இதனால் காந்தியின் போதனைகள் குறித்து மாணவர்களுக்கு தெரிவது இல்லை எனவே அன்றைய தினம் பள்ளிகள், அரசு அலுவலகங்களில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட வேண்டும்.
சமூக ஆர்வலர் ஜெகதீசனார் அளித்த மனுவில், கோவை மாநகாட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அங்கன்வாடி மையங்கள் போதிய அடிப்படை வசதிகள் இன்றி செயல்படுகிறது. இங்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story