டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்


டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 17 Sept 2019 3:30 AM IST (Updated: 16 Sept 2019 10:34 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரில் பொதுமக்களுக்கு இடையூராக உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக்கடையை மூடக்கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் பெரியக்குப்பம் பகுதியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி தெரு, வள்ளலார் தெரு, சித்திவிநாயகர் கோவில் தெரு, கம்பர் தெரு, தாவூத்கான்பேட்டை ஆகிய இடங்களில் பல குடும்பங்கள் வசித்து வருகின்றது. இந்நிலையில் கடந்த ஆண்டு இந்த பகுதியில் அரசு டாஸ்மாக் மதுபானக்கடை ஒன்று திறக்கப்பட்டது. இந்த கடை குடியிருப்புக்கு மத்தியிலும், கோவில் அருகாமையிலும் இருந்ததால், அந்த வழியாக செல்லும் அப்பகுதியை சேர்ந்த பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் என பலர் சிரமம் அடைந்து வந்ததாக கூறப்பட்டது. இதுதொடர்பாக அவர்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்ததை தொடர்ந்து, டாஸ்மாக் மதுக்கடை உடனடியாக மூடப்பட்டது.

ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த மதுக்கடை மீண்டும் அதே இடத்தில் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது.

இதைக்கண்டித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீரென்று போராட்டம் நடத்தினர். அப்போது, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் மதுக்கடையை உடனடியாக அகற்றி வேறு இடத்திற்கு மாற்ற வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் அவர்கள் திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன் தலைமையில் இது தொடர்பான மனுவை கலெக்டரிடம் அளித்தனர். அம்மனுவை பெற்றுக்கொண்ட அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Next Story